இந்தியா பெயரை மாற்றுவோம்.. பிடிக்கலைனா நாட்டை விட்டு வெளியேறுங்கள் : பாஜக மூத்த தலைவர் பேச்சால் சர்ச்சை!!

Author: Udayachandran RadhaKrishnan
10 September 2023, 7:00 pm
BJP Mp - Updatenews360
Quick Share

இந்தியா பெயரை மாற்றுவோம்.. பிடிக்கலைனா நாட்டை விட்டு வெளியேறுங்கள் : பாஜக மூத்த தலைவர் பேச்சால் சர்ச்சை!!

பாரத் பெயர் மாற்றம் குறித்து பாஜக மூத்த தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ள கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது விரைவில் இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றப்படும் என்றும், கொல்கத்தாவில் உள்ள வெளிநாட்டவர்களின் சிலைகள் அகற்றப்படும் என்றும் திலீப் கோஷ் கூறியிருந்தார். நாட்டின் பெயர் மாற்றத்திற்கு எதிரானவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என என்றும் அவர் கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தின் மெதினிபூர் எம்.பியான திலீப் கோஷ் தனது தொகுதியில் கரக்பூர் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மேற்கு வங்கத்தில் எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்ததும், கொல்கத்தாவில் உள்ள அனைத்து வெளிநாட்டவர்களின் சிலைகளையும் உடனடியாக அகற்றுவோம்..

இந்தியாவின் பெயர் நிச்சயமாக பாரத் என்று மாற்றப்படும். அதை விரும்பாதவர்கள் நாட்டை விட்டு தாராளமாக வெளியேறலாம்” என்று அவர் தெரிவித்தார். திலீப் கோஷின் இந்தக் கருத்துகள் இணையத்தில் மிகப் பெரியளவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மேற்கு வங்கத்தை சேர்ந்த மற்றொரு மூத்த பாஜக தலைவரான ராகுல் சின்ஹா, “ஒரு நாட்டிற்கு இரண்டு பெயர்கள் நிச்சயம் இருக்க முடியாது.. உலகத் தலைவர்கள் ஜி20 மாநாட்டில் பங்கேற்க டெல்லியில் இருக்கும் நிலையில், நாட்டின் பெயரை மாற்ற இதுவே சரியான நேரம்” என்றார். இப்படி இரு பாஜக தலைவர்கள் பெயர் மாற்றம் குறித்துக் கூறிய கருத்துகள் பெரும் விவாதமாக மாறியுள்ளது.

இதற்கு அங்கே ஆளும் கட்சியாக இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கடும் பதிலடி கொடுத்துள்ளது. இது குறித்து திரிணாமுல் செய்தித் தொடர்பாளர் சாந்தனு சென் கூறுகையில், “எதிர்க்கட்சிகள் அனைவரும் இப்போது இந்தியக் கூட்டணிக்குக் கீழ் வந்துள்ளோம். இதைப் பார்த்து பாஜக பயந்துவிட்டது.

இதனால் உண்மையான பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்ப பாஜக முயல்கிறது. இதன் காரணமாகவே அவர்கள் இப்படிப் பேசி வருகிறார்கள்” என்று குற்றஞ்சாட்டினார். அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், இப்போது 25+ எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் திரண்டுள்ளனர்.

காங்கிரஸ், திரிணாமுல் என பல்வேறு கட்சிகளும் ஒரே அணியில் வந்துள்ளது. இந்தக் கூட்டணிக்கு “இந்தியா” எனப் பெயரிட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் கூட பிரதமர் மோடி உரையாற்றும் போது, “இந்தியா” என்றே எதிர்க்கட்சிகள் கோஷமிட்டனர்.

இந்தச் சூழலில் தான் வரும் செப். 18 முதல் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டுகிறது. இதில் இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவதற்கான மசோதா முன்மொழியப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. “இந்தியா” கூட்டணியைக் கண்டு அஞ்சியே பாஜக இந்த முடிவை எடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் சாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 328

0

0