செந்தில் பாலாஜி போல சிக்குவாரா?… திமுக எம்பிக்கு புதிய தலைவலி!

Author: Udayachandran RadhaKrishnan
11 September 2023, 8:12 am
Quick Share

திமுக அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ பெரியசாமி ஆகியோர் விடுவிக்கப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மறு விசாரணைக்கு எடுத்துக்கொண்டு உள்ள நிலையில் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி எம்பி ஜெகத்ரட்சகனுக்கு பழைய வழக்கு ஒன்றில் புதிய தலைவலி உருவாகி இருக்கிறது.

ஜெகத்ரட்சகனுக்கு சிக்கல்

ஏற்கனவே அமலாக்கத் துறையால் சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் அரசு வேலை பெறுவதற்கு லஞ்சம் வாங்கிய வழக்கு போலவே ஜெகத்ரட்சகன் மீதான வழக்கும் அமைந்திருப்பது தான் இதில் விசேஷமான ஒற்றுமை.

முதலமைச்சர் ஸ்டாலின் மகனும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி கிளப்பிவிட்ட சனாதன ஒழிப்பு விவகாரம் நாடு முழுவதும் இந்துக்களிடையே ஏற்படுத்திய பெரும் கொந்தளிப்பே இன்னும் அடங்காத நிலையில் ஜெகத்ரட்சகன் மீதான நில மோசடி வழக்கு தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

அவர் மீதான நில அபகரிப்பு வழக்கு 27 ஆண்டுகளுக்கு முந்தையது. அந்த வழக்கின் பின்னணி வித்தியாசமானது.

1.55 ஏக்கர் நிலம் விவகாரம்

சென்னை குரோம்பேட்டையில் குரோம் லெதர் என்ற தொழிற்சாலைக்கு சொந்தமாக இருந்த நிலங்கள், 1982-ம் ஆண்டில் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தின்கீழ் அரசுடைமை ஆக்கப்பட்டன. அந்த நிலங்களை நீராதாரங்களுக்கு பயன்படுத்தும் வகையில் 1984-ம் ஆண்டில் அடிக்கல்லும் நாட்டப்பட்டது.

இந்த நிலையில் அரக்கோணம் தொகுதி திமுக நாடாளுமன்ற எம்பியான ஜெகத்ரட்சகன், கடந்த 1996-ம் ஆண்டு குரோம் லெதர் பேக்டரி நிறுவனத்தின் பங்குகளை குரோம் தோல் தொழிற்சாலை தலைவராக இருந்த தனது அதிகாரத்தின் மூலம் 1.55 ஏக்கர் நிலத்தை முறைகேடாக வாங்கியதாகவும் நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தின் விதிகளை மீறி, 41 பயனாளிகளுக்கு பிரித்துக் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் நீராதாரங்களுக்கு பயன்படும் வகையில் ஒதுக்கப்பட்ட நிலத்தை, தனி நபர்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டதாக ஜெகத்ரட்சகன் மீது புகார் கூறப்பட்டது.

அதேபோல 170 ஏக்கர் நிலத்தை பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகளின் ஒத்துழைப்போடு போலி ஆவணங்கள் தயாரித்து அபகரிப்பு செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் அந்த நிலத்தில் வீட்டுமனைகளுக்கான லேஅவுட்களையும் போட்டு சுமார் 1700 கோடி ரூபாய் வரை விற்பனை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

2016ல் விஸ்வரூபம்

இது தொடர்பாக குவிண்டன் டாவ்சான் என்பவர் அளித்த புகார் தொடர்பாக குரோம் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதில் மோசடி செய்ததாகவும், நில மோசடியில் ஈடுபட்டதாகவும், ஜெகத்ரட்சகனுக்கு எதிராக 2007ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின் விசாரணை நடந்து, முகாந்திரம் எதுவும் இல்லை எனக் கூறி 2009ல் வழக்கு முடித்து
வைக்கப்பட்டது. எனினும் 2016ல் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும் வகையில், இரண்டு வழக்குகளை சிபிசிஐடி பதிவு செய்தது.

2020ம் ஆண்டு வரை இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் தீவிரமும் காட்டினர். விறுவிறுவென விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையிலும் இறங்கினர். ஆனால் தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்யவேண்டியும், விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க கோரியும் ஜெகத்ரட்சகன் எம்பி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

உச்சநீதிமன்றத்தில் முறையீடு

இதை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் அவர் மீதான இரு வழக்குகளையும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்துதான் குவிண்டன் டாவ்சான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து இருக்கிறார்.

அதில், “ஜெகத்ரட்சகன் மீதான குற்றச்சாட்டு என்பது மிகப் பெரியது. ஆவண ஆதாரங்கள் அனைத்தும் இருந்தும் கூட, சென்னை உயர்நீதிமன்றம் அதனை கருத்தில் கொள்ளத் தவறிவிட்டது. அதுமட்டுமல்லாமல் அரசுக்கு சேர வேண்டிய மிகப்பெரிய தொகை, முறைகேடாக கையாடல் செய்யப்பட்டும் உள்ளது. அதேபோல் ஒரு பெரும் தொகை பணம் ஈட்டப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தியதையும் உயர்நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல் வழக்கை ரத்து செய்துவிட்டது. எனவே இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஒரு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்து இருக்கிறார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செந்தில்பாலாஜி போல சிக்கும் திமுக எம்பி

இது குறித்து டெல்லியில் மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுவது இதுதான். “அரசு வேலைக்கு லஞ்சம் வாங்கிய வழக்கில் எப்படி அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டதோ, அதேபோல ஜெகத்ரட்சகன் எம்பி மீதான நில அபகரிப்பு வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது என்று கருதி மனுதாரர் உச்ச நீதிமன்றத்தை அணுகி இருக்கலாம்.

அல்லது திமுக ஆட்சிக்கு வந்த பின்பு சொத்துக்கு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோரை கீழமை நீதிமன்றங்கள் விடுவித்ததை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மறு விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருப்பதை மனதில் வைத்தும் கூட ஜெகத்ரட்சகன் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிடக் கோரி மனுதாரர் மிகுந்த நம்பிக்கையுடன் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றிருக்கலாம்.

திமுகவில் பெரிய பணக்காரர்

ஏனென்றால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்குகளை ரத்து செய்தது. அதன் பின் ஒரு ஆண்டு கடந்து விட்ட நிலையில் இப்போதுதான் மனுதாரர் டாவ்சான் உச்சநீதிமன்றத்திற்கு சென்று இருக்கிறார். அதனால் நீதித்துறையை அவர் முழுமையாக நம்புகிறார் என்பதும் தெரிகிறது.

இடையே இந்த வழக்கில் அமலாக்கத் துறையும் களம் இறங்கியது. ஆனால் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்த பிரதான வழக்குகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியாது என்று தெரிவித்து ஜெகத்ரட்சகன் மீது அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்து விட்டது.

திமுகவில் மிகப்பெரிய பணக்காரர் என்று கருதப்படுபவர் அரக்கோணம் தொகுதி எம்பி ஜெகத்ரட்சகன்தான். திமுகவின் நாடாளுமன்றத் தேர்தல் செலவுகளுக்கு பெரும் தொகையை ஒதுக்கி தருபவரும் அவர்தான் என்று கூறப்படுவதும் உண்டு. மருத்துவக் கல்லூரி மற்றும் சில பொறியியல் கல்லூரிகளை ஜெகத்ரட்சகன் நடத்தி வருவதால் அதன் மூலம் அவரால் கோடி கோடியாக பணம் சம்பாதிக்க முடிகிறது என்பார்கள்.

ஜெ

அவருக்கு ஐம்பதாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட திமுக தலைவர்களின் சொத்து பட்டியலில் தெரிவித்தும் இருந்தார். அதை ஜெகத்ரட்சகன் இதுவரை மறுத்ததாக தெரியவில்லை.

தவிர இலங்கையின் அம்பாந் தோட்டை துறைமுக பகுதியில் அவர் செய்ததாக கூறப்படும் 26 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கடந்த ஆண்டு அந்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் முற்றிலும் கரைந்து போய்விட்டது. அந்த அதிர்ச்சியில் இருந்தே அவர் இன்னும் மீளவில்லை. அதற்குள் 1700 கோடி ரூபாய் நில அபகரிப்பு புகார் உச்சநீதிமன்றம் வரை சென்று இருப்பதால் ஜெகத்ரட்சகன் எம்பிக்கு இது இன்னொரு தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடுவதற்கு வாய்ப்பு உள்ளது. அல்லது உச்சநீதிமன்றமே நேரடி விசாரணையிலும் இறங்கலாம். எப்படிப் பார்த்தாலும்
ஜெகத்ரட்சகன் எம்பி மீதான வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிடுவதற்கான வாய்ப்புகளே தென்படுகின்றன.
இந்த வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதி கிடைத்துவிட்டால் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் ஜெகத்ரட்சகன் மீதான வழக்கை மீண்டும் கையில் எடுத்துவிடும்.

ஏற்கனவே அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி
படாத பாடு பட்டு வரும் நிலையிலும், அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ பெரியசாமி ஆகியோர் மீதான வழக்குகள் புத்துயிர் பெற்றிருப்பதாலும், உதயநிதியால் தேசிய அளவில் எழுந்துள்ள சோதனைகளால் சிக்கி தவித்து வரும் திமுகவுக்கு இது இன்னொரு பின்னடைவாகவே தென்படுகிறது” என்று அந்த மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசும்போது அமைச்சர்களால் அரசுக்கு எந்த கெட்ட பெயரும் வந்துவிடக் கூடாது என்று கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அமைச்சர்கள் எதுவும் பேசாத நிலையிலேயே அவர்களால் திமுகவுக்கு இப்போது மீண்டும் சோதனை வந்திருப்பதென்னவோ உண்மை!

Views: - 198

0

0