கொரோனா ஊரடங்கால் தடுக்கப்பட்ட இறப்புகள் இவ்வளவா..! மத்திய சுகாதார அமைச்சர் விளக்கம்..!

15 September 2020, 3:15 pm
Harsh_Vardhan_UpdateNews360
Quick Share

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் சுமார் 14 லட்சம் முதல் 29 லட்சம் பாதிப்புகளையும் 37,000 முதல் 78,000 இறப்புகளையும் தடுத்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மழைக்கால அமர்வின் இரண்டாம் நாளில் மாநிலங்களவையில் பேசிய சுகாதார அமைச்சர், இந்தியா ஊரடங்கு நிலையில் இருந்த நான்கு மாதங்கள் கூடுதல் சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்க உதவியது. மனித வளத்தை மேம்படுத்துவதில் மற்றும் பிபிஇ கிட்கள், என் 95 முகக்கவசம், வெண்டிலேட்டர் போன்றவை அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டன.

கொரோனா தொற்றுநோயை இந்தியா நன்கு நிர்வகிக்க முடிந்தது என்று அமைச்சர் குறிப்பிட்டார். கொரோனா வைரஸ் இறப்பு மற்றும் மீட்பு விகிதங்கள் முறையே 1.67% மற்றும் 77.65% ஆக உள்ளன.

“இந்தியா ஒரு மில்லியனுக்கு 3,320 பாதிப்புகள் மற்றும் 55 இறப்புகள் என கட்டுப்படுத்த முடிந்தது. இது உலகின் மிகக் குறைவான ஒன்றாகும்” என்று ஹர்ஷவர்தன் கூறினார்.

உலக சுகாதார அமைப்பால் நிர்ணயிக்கப்பட்டதை விட இந்தியா அதிக கொரோனா வைரஸ் பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாக அவர் மேலவைக்கு தெரிவித்தார்.

“கொரோனா சோதனை என்பது ஒரு நாளைக்கு சுமார் 1 மில்லியன் சோதனைகள் ஆகும். இது ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு 720 சோதனைகள் என்று ஆகும். இது உலக சுகாதார அமைப்பால் நிர்ணயிக்கப்பட்டதை விட மிக அதிகம்.

உலக சுகாதார அமைப்பு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு மில்லியனுக்கு 140 சோதனைகள் நடத்த அறிவுறுத்தியுள்ளது. செப்டம்பர் 11 வரை இந்தியாவில் மொத்தம் 5,51,89,226 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.” என்று சுகாதார அமைச்சர் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

எனினும் ஹர்ஷவர்தன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தொற்றுநோயின் தீவிரம் மிகவும் அதிகமாக இருப்பதாகக் கூறினார்.

“கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் நீளும் என்பதை உறுப்பினர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அதே நேரத்தில் இந்தியாவில் கொரோனா பரவாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்து வருவதை நான் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.” என்று அவர் கூறினார்.