ரயிலின் குறுக்கே குட்டியுடன் வந்த யானை! டிரைவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

13 April 2021, 8:34 am
Quick Share

தண்டவாளத்தில் ரயில் வரும் போது, யானை குட்டியுடன் வந்த யானை தண்டவாளத்தை கடப்பதை பார்த்த ரயில் டிரைவர்கள், அவசர பிரேக் பிடித்து ரயிலை நிறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ரயில் வருவது தெரியாமல் தண்டவாளத்தை கடக்கும் யானை கூட்டம், ரயிலில் அடிபட்டு இறக்கும் சம்பவம் இந்தியாவில் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. விபத்தை தவிர்க்க யானை கடக்கும் பாதைகளில் ரயிலை மெதுவாக இயக்கும் படி, ரயில்வே அமைச்சகம் டிரைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அதனையும் மீறி ரயிலில் யானைகள் அடிபடுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், வடகிழக்கு ரயில்வேயின் டிரைவர்கள் விரைந்து செயல்பட்ட காரணத்தால், யானையும், அதன் குட்டியும் விபத்தில் இருந்து தப்பித்துள்ளன.

வடகிழக்கு ரயில்வேயின் 03248 என்ற எண் கொண்ட கேபிடல் எக்ஸ்பிரஸ் ரயிலை சர்கார், குமார் என்ற இரு டிரைவர்கள் இயக்கி உள்ளனர். அவர்கள் காட்டுப்பகுதி ஒன்றில் ரயிலை இயக்கும் போது, யானை ஒன்று, தனது குட்டியுடன் ரயில் தண்டவாளத்தை கடந்திருக்கிறது. இதனை கண்ட இருவரும் விரைந்து செயல்பட்டு, அவசர பிரேக் பிடித்து ரயிலை நிறுத்தி உள்ளனர்.

இதன் வீடியோவை, வடகிழக்கு ரயில்வே துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, டிரைவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த வீடியோ நெட்டிசன்களை கவர்ந்து வைரலாக பரவியது. சுமார் 5 ஆயிரம் பேர் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர். பலரும் டிரைவர்களின் சமயோஜிதகத்தை பாராட்டி கருத்துக்களையும் பதிவிட்டனர்.

Views: - 22

0

0