வெளிநாட்டு நிதி பெற ஆதார் கட்டாயம்..! மக்களவையில் நிறைவேற்றப்பட்டது சட்டத்திருத்தம்..!
21 September 2020, 8:10 pmதன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு ஆதாரை கட்டாயமாக்கும் வகையில் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் (எஃப்.சி.ஆர்.ஏ) 2010’இல் திருத்தங்கள் மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. மேலும் இது அரசு ஊழியர்கள் வெளிநாட்டு நிதி பெறவும் தடை விதிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பங்களிப்பைப் பெறுவதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை அதிகரிக்க எஃப்.சி.ஆர்.ஏ’வின் விதிமுறைகளை சீராக்க இந்த திருத்தங்கள் முயல்கின்றன என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த மசோதா மேலவையில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ராம் நாத் கோவிந்திடமிருந்து ஒப்புதல் பெற்றவுடன், அரசு ஊழியர்கள் வெளிநாட்டு நிதி பெறுவதைத் தடை செய்யும்.
மேலும், வெளிநாட்டு மூலங்களிலிருந்து நிதி தேடும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளின் அனைத்து அலுவலர்களுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக இருக்கும்.
இந்தத் திருத்தங்கள் எஃப்.சி.ஆர்.ஏ’இன் கீழ் பெறப்பட்ட வெளிநாட்டு நிதியை நிர்வாக நோக்கங்களுக்காக தற்போதைய வரம்பான 50% முதல் 20% வரை கட்டுப்படுத்தும்.
“2010 மற்றும் 2019 ஆண்டுகளுக்கு இடையில் வருடாந்த வெளிநாட்டு பங்களிப்பு இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் வெளிநாட்டு பங்களிப்பைப் பெறுபவர்கள் பலவற்றை அவர்கள் பதிவுசெய்த அல்லது அந்தச் சட்டத்தின் கீழ் முன் அனுமதி வழங்கப்பட்ட நோக்கத்திற்காகப் பயன்படுத்தவில்லை. அவர்களில் பலர் வருடாந்திர வருமானத்தை சமர்ப்பித்தல் மற்றும் முறையான கணக்குகளை பராமரித்தல் போன்ற அடிப்படை சட்டரீதியான விஷயங்களை செய்வதில்லை என்பதும் கண்டறியப்பட்டது.” என்று முன்மொழியப்பட்ட திருத்தம் கூறுகிறது.
“இது 2011 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில், அரசு சாரா நிறுவனங்கள் உட்பட 19,000’க்கும் மேற்பட்ட பெறுநர்களின் அமைப்புகளின் பதிவு சான்றிதழ்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு வழிவகுத்தது.” என்று அது மேலும் கூறியுள்ளது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமானால், சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதி பயன்படுத்துவதை தடை செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கும்.
0
0