இஸ்ரோ விஞ்ஞானியை விஷம் கொடுத்து கொல்ல முயற்சி..! 3 ஆண்டுகளுக்கு பின் அம்பலமான அதிர்ச்சித் தகவல்..!

6 January 2021, 12:22 pm
Tapan_Misra_UpdateNews360
Quick Share

இஸ்ரோவின் உயர்மட்ட விஞ்ஞானி ஒருவர், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தனக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார். 

மே 23, 2017 அன்று பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் பதவி உயர்வு நேர்காணலின் போது, ​​ஆபத்தான ஆர்சனிக் ட்ராக்ஸைடுடன் கூடிய விஷம் கொடுக்கப்பட்டதாக விஞ்ஞானி தபன் மிஸ்ரா குற்றம் சாட்டினார்.  உணவு உண்டபோது, தோசைக்கான சட்னியில் அபாயகரமான விஷம் கலந்திருக்கலாம் என்று அவர் கூறினார்.

மிஸ்ரா தற்போது இஸ்ரோவின் மூத்த ஆலோசகராக பணியாற்றி வருகிறார். மேலும் இந்த மாத இறுதியில் பணி ஓய்வு பெற உள்ளார். அவர் முன்னர் அகமதாபாத்தை தளமாகக் கொண்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) விண்வெளி பயன்பாட்டு மையத்தின் இயக்குநராக பணியாற்றினார்.

‘லாங் கெப்ட் சீக்ரெட்’ என்ற தலைப்பில் ஒரு பேஸ்புக் பதிவில், மிஸ்ரா மேலும் கூறுகையில், ஜூலை 2017’இல், உள்துறை பாதுகாப்பு அதிகாரிகள் தன்னைச் சந்தித்து, ஆர்சனிக் விஷம் குறித்து எச்சரித்தனர் என்றும், மேலும் சரியான தீர்வில் கவனம் செலுத்த மருத்துவர்களுக்கு உதவினார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

எனினும் மிஸ்ரா பின்னர் கடுமையான சுவாச கோளாறு, அசாதாரண தோல் வெடிப்புகள், தோல் உதிர்தல் மற்றும் பூஞ்சை தொற்று உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டதாகக் கூறினார்.

புதுடெல்லியின் எய்ம்ஸ் மருத்துவர்களால் ஆர்சனிக் நச்சுத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறி அதற்கான மருத்துவ அறிக்கையையும் அவர் சமூக ஊடகத்தில் வெளியிட்டார்.

“இதற்கான நோக்கம் உளவு தாக்குதல் என்று தோன்றுகிறது. செயற்கை துளை ரேடார் கட்டமைப்பதில் நிபுணத்துவம் போன்ற மிகப் பெரிய இராணுவ மற்றும் வணிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஞ்ஞானியை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டு அந்நிய சக்திகள் இதைச் செய்திருக்கலாம்.” என்று அவர் குற்றம் சாட்டினார்.

பின்னர் இது தொடர்பாக ஒரு ஆங்கில ஊடகத்திடம் பேசிய மிஸ்ரா, “இந்திய அரசு இதை விசாரிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றார்.

எனினும் மிஸ்ராவின் கூற்றுக்கள் குறித்து இஸ்ரோ மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து உடனடியாக எந்த பதிலும் கிடைக்கவில்லை.

Views: - 22

0

0