வெள்ளத்தில் தத்தளிக்கும் மகாராஷ்டிரா..! 28 பேர் பலியான பரிதாபம்..!

Author: Sekar
16 October 2020, 7:05 pm
mumbai_rains_updatenews360
Quick Share

மேற்கு மகாராஷ்டிரா மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 28 பேர் பலியாகியுள்ள நிலையில் 2,300 க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் பெரிய அளவிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன. அங்கு 21,000’க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர் என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

பிரதேச கமிஷனர் அலுவலகத்தின்படி, மழை தொடர்பான சம்பவங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை இப்பகுதியில் 28 ஆக உயர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
புனே, சோலாப்பூர், சதாரா மற்றும் சாங்லி மாவட்டங்களில் 57,000 ஹெக்டேர் பரப்பளவில் கரும்பு, சோயாபீன், காய்கறிகள், அரிசி, மாதுளை மற்றும் பருத்தி போன்ற பயிர்கள் சேதமடைந்துள்ளன.

இப்பகுதியில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சுமார் 513 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக புனே பிரதேச ஆணையர் அலுவலகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மழை பெய்ததில் மொத்தம் 2,319 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், அதன்பின்னர் சோலாப்பூர், சாங்லி, சதாரா மற்றும் புனே மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறித்தும் அவர் கூறினார்.

“மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை மொத்தம் 28 பேர் இறந்துள்ளனர். இவர்களில் சோலாப்பூரில் 14 பேரும், சாங்லியில் 9 பேரும், புனேவில் 4 பேரும், சதாராவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்” என்று அந்த அதிகாரி கூறினார்.

புனேவில் ஒருவரை இன்னும் காணவில்லை என்றும் அவரைத் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

சோலாப்பூரில் 17,000, சாங்லியில் 1,079, புனேவில் 3,000 மற்றும் சதாராவில் 213 பேர் என மொத்தம் 6,061 வீடுகளைச் சேர்ந்த 21,292 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Views: - 38

0

0