80 வயது தாத்தாவுக்கு ரூ.80 கோடி கரண்ட் பில்! பிபி எகிறி மருத்துவமனையில் அனுமதி

26 February 2021, 9:11 am
Quick Share

மஹாராஷ்டிராவை சேர்ந்த 80 வயது தாத்தா ஒருவருக்கு, 80 கோடி ரூபாய் கரண்ட் பில் வந்துள்ளது. மின்கட்டணத்தை பார்த்து அதிர்ச்சியில் ஆடிப்போன அவர், ரத்த அழுத்தம் எகிறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐயோ பாவம்!!

மஹாராஷ்டிர மாநிலம் நலசோபாரா என்ற உரை சேர்ந்தவர் கன்பத் நாயக் (வயது 80. இவரது வீட்டிற்கு மகாராஷ்டிரா மாநில மின்சார விநியோக நிறுவனம் லிமிடெட், கடந்த மாதத்திற்கான மின்கட்டணத்தை அனுப்பியது. அதனை கண்ட அவர் அதிர்ச்சியின் எல்லைக்கே சென்றார். பின்னே இருக்காதா.. அவருக்கு மின் கட்டணமாக 80 கோடி ரூபாய் வந்திருக்கிறது.

ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த கன்பத்தின் உடல்நிலை, இந்த திடீர் அதிர்ச்சியை தாங்கி கொள்ளும் அளவுக்கு இல்லை. அவருக்கு ரத்த அழுத்தம் எகிறியதையடுத்து, அருகிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அவரது பேரன்கள் அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்றார். இந்த தகவல் ஊரெல்லாம் பரவியதையடுத்து, தவறை உணர்ந்து இ.பி., இது மனித தவறு தான் என கூறி, மின்சார கட்டணத்தை திரும்ப பெற்றது.

இதுகுறித்து கன்பத்தின் பேரன் நிகில் என்பவர் கூறுகையில், ‛‛முதலில் மின் கட்டணத்தை பார்த்த போது, அது தங்கள் மாவட்டம் முழுவதற்குமான மின் கட்டணம் என்றே தோன்றியது. ஆனாலும் கொரோனா காலத்தில் அதிக மின் கட்டணம் வந்ததால், இதனை கண்டு நாங்கள் பயந்துவிட்டோம்’’ என்றார்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛இது நிர்வாகத்தின் தவறால் நடந்துவிட்டது. 6 இலக்க எண்களை குறிப்பிடுவதற்கு பதிலாக, அந்த இடத்தில் 9 இலக்க எண்கள் இடம்பெற்றுவிட்டன. இதனையடுத்து அந்த முதியவருக்கான மின் கட்டணம் திரும்ப பெற்றப்பட்டு விட்டது. தவறும் சரி செய்யப்பட்டு விட்டது’’ என்றார்.

Views: - 8

0

0