எதிர்ப்பெல்லாம் பொய்யா..? விவசாய மசோதாக்களை முதலில் அறிமுகப்படுத்தியது காங்கிரஸ் ஆளும் மாநிலமே..!

28 September 2020, 5:17 pm
Maharastra_UpdateNews360
Quick Share

மகாராஷ்டிரா அரசாங்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சர்ச்சைக்குரிய விவசாய சீர்திருத்த மசோதாக்களின் அவசர சட்டங்களை நடைமுறைப்படுத்தியது இப்போது வெளியாகி ஆளும் மகா விகாஸ் அகாதிக்கு ஒரு பெரிய தர்மசங்கடமாக மாறியுள்ளது.

ஆகஸ்ட் 10’ம் தேதி மகாராஷ்டிரா சந்தைப்படுத்தல் இயக்குநர் சதீஷ் சோனி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை சந்தைக் குழுக்கள் (ஏபிஎம்சி) மற்றும் மாவட்ட வேளாண் கூட்டுறவு நிறுவனங்கள் மாநிலத்தில் மூன்று அவசர சட்டங்களையும் கண்டிப்பாக செயல்படுத்த உத்தரவிட்டிருந்தார்.

மகா விகாஸ் அகாதியில் அங்கம் வகிக்கும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் புதிய சட்டங்களை கடுமையாக எதிர்த்த போதிலும், இது அவசர சட்டமாக கொண்டு வந்த போதே, இதற்கான விதிகள், வழிகாட்டுதல்கள் அல்லது கட்டமைப்பை மத்திய அரசு வெளியிடுவதற்கு முன்பே உத்தவ் அரசு முன்னோக்கிச் சென்றது. இதன் மூலம் புதிய விவசாய சீர்திருத்த சட்டங்களை அமல்படுத்திய முதல் மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது.

இது தொடர்பாக சோனியை தொடர்பு கொண்டபோது, அறிவிப்பை வெளியிட்டதை உறுதிப்படுத்தினார். ஆனால் தற்போது அது தொடர்பான அரசியல் முரண்பாடுகளைக் கருத்தில் கொண்டு மேலும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சந்தைப்படுத்தல் அமைச்சர் பாலாசாகேப் ஷம்ரா பாட்டீலும் மழுப்பியுள்ளார்.

“இது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இப்போது துணை முதலமைச்சர் அஜித் பவாரின் சமீபத்திய அறிக்கையின் பின்னர் நிலைமை வேறுபட்டது.” என பாட்டீல் தனது கருத்துக்களை முடித்துக் கொண்டார்.

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளின் தலைவர்கள் ஆகஸ்ட் 10 அறிவிப்பை அறியாதவர்களாகத் தோன்றுவது எப்படி என்பது புதிரானது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் கூறுகின்றன.

விவசாயிகளுக்கு ஆதரவான புதிய சீர்திருத்த மசோதாக்களை அதிரிபுதிரியாக மகாராஷ்டிராவில் அமல்படுத்திய அரசியல் தலைவர்கள், தற்போது மத்திய அரசை எதிர்ப்பதற்காக விவசாயிகள் போராட்டத்தை தூண்டி விடுவதாக மக்கள் கருதுகின்றனர்.