குலாம் நபி ஆசாத்திடமிருந்து பொதுச் செயலாளர் பதவி பறிப்பு..! கடிதம் எழுதிய தலைவர்களை கழட்டி விட்ட சோனியா..!

11 September 2020, 11:41 pm
Cong_CWC_UpdateNews360
Quick Share

காங்கிரஸ் கட்சியில் ஒரு பெரிய மாற்றமாக, கட்சியின் செயற்குழுவை மறுசீரமைத்து, மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், மோதிலால் வோரா, அம்பிகா சோனி, மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் லூய்சின்ஹோ ஃபலேரியோ ஆகியோரை பொதுச் செயலாளர்கள் பதவிகளில் இருந்து நீக்கியது.

ஆயினும், ஆசாத் மற்றும் சோனி ஆகியோர் புனரமைக்கப்பட்ட செயற்குழுவில் தொடர்கின்றனர்.

கடந்த மாதம் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெறவிருந்த நிலையில் கட்சியில் சீர்திருத்தங்களை புகுத்தி கட்சியை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். அதில் குலாம் நபி ஆசாத்தும் ஒரு அங்கமாக இருந்தார்.

கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு, கட்சியின் கட்டமைப்பை முழுவதுமாக மாற்றியமைக்கவும், முழுநேரத் தலைவரைத் தேர்ந்தெடுக்கவும், காங்கிரஸ் செயற்குழுவின் தேர்தலுக்காகவும் அந்த கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் குளம் நபி ஆசாத்திடம் இருந்த பொதுச் செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டு அவரை செயற்குழுவில் மட்டும் தொடர வைத்துள்ளது.

ப.சிதம்பரம், ஜிதேந்திர சிங், தாரிக் அன்வர் மற்றும் ரன்தீப் சுர்ஜீவாலா ஆகியோர் கட்சியின் மறுசீரமைப்பில் வழக்கமான செயற்குழு உறுப்பினர்களாக தொடர்கின்றனர். செயல்பாட்டு மற்றும் நிர்வாக விஷயங்களில் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு உதவுவதற்காக ஒரு குழுவையும் காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.

கட்சி விஷயங்களில் காங்கிரஸ் தலைவருக்கு உதவ ஏ.கே.ஆண்டனி, அகமது படேல், அம்பிகா சோனி, கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக் மற்றும் ரன்தீப் சுர்ஜீவாலா ஆகியோர் அடங்கிய சிறப்புக் குழு சோனியாகாந்திக்கு நிர்வாக விஷயங்களில் உதவ நியமிக்கப்பட்டுள்ளது.

ஜிதின் பிரசாத் ஒரு மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் உத்தரபிரதேசத்திலிருந்து மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. அதே நேரத்தில் பிரியங்கா காந்தி உத்தரபிரதேசத்தில் பொதுச் செயலாளராக தொடர்கிறார்.

மேலும் இத்துடன் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சித் தேர்தல்களை நடத்தும் மத்திய தேர்தல் ஆணையமும் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. மதுசூதனன் மிஸ்ட்ரி இதற்கு தலைவராக உள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த முதல்முறை எம்பியான ஜோதிமணியும் இதில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார்.

கட்சியில் மாற்றங்களைக் கோரி கடிதம் எழுதிய பெரும்பாலான தலைவர்கள் பதவியேதும் இல்லாமல் இந்த மாற்றத்தின் மூலம் கழட்டி விடப்பட்டுள்ளனர். அதே போல் ஒன்றுக்கும் மேல் பதவி வைத்திருந்தவர்களிடம் இருந்து சில பதவிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் கட்சியில் மாற்றங்களை அமல்படுத்தி கட்சியை வளர்க்கக்கோரிய தலைவர்களுக்கு சோனியா காந்தி ஒரு தெளிவான சமிக்ஞையை அனுப்பியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Views: - 0

0

0