பள்ளி மாணவர்களே உங்களுக்குத் தான்..! இனி என்ஜினீயரிங் படிக்க இந்த மூன்று பாடங்களும் கட்டாயமில்லை..!

Author: Sekar
12 March 2021, 4:54 pm
Students_UpdateNews360
Quick Share

பொறியியல் பயில ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் விதமாக, இனி பொறியியல் படிப்புகளில் சேர 12’ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களை படிக்க வேண்டிய அவசியமில்லை என மத்திய அரசின் கீழ் இயங்கும் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவித்துள்ளது.

ஏஐசிடிஇ வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின் மூலம் இளங்கலை பொறியியல் படிப்புகளான பி.இ மற்றும் பி.டெக் ஆகியவற்றில் சேருவதற்கு இந்த மூன்று பாடங்களையும் விருப்ப பாடங்களாக மாற்றியுள்ளது.

திருத்தப்பட்ட விதிகள் ஏஐசிடிஇ’யின் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒப்புதல் செயல்முறை கையேடு 2020-2021’இல் அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய விதிமுறைகளின்படி, மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர பின்வரும் ஏதேனும் மூன்று பாடங்களில் 10 + 2 தேர்ச்சி பெற வேண்டும். 

பாடப்பிரிவுகள் : இயற்பியல், கணிதம், வேதியியல், கணினி அறிவியல், மின்னணுவியல், தகவல், தொழில்நுட்பம், உயிரியல், தகவல் பயிற்சிகள், பயோடெக்னாலஜி, தொழில்நுட்ப வொகேஷனல் படிப்புகள், வேளாண்மை, பொறியியல், கிராபிக்ஸ், வணிக ஆய்வுகள், தொழில்முனைவு.

புதிய நடவடிக்கை பல்வேறு பின்னணியைச் சேர்ந்த மாணவர்கள் பொறியியல் படிப்பை அனுமதிக்கும். “பல்கலைக்கழகங்கள் கணிதம், இயற்பியல், பொறியியல் வரைதல் போன்ற பொருத்தமான இணைப்பு படிப்புகளை வழங்கும். பல்வேறு பின்னணியில் இருந்து வரும் மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலம் விரும்பிய கற்றல் முடிவுகளை அடைய முடியும்” என்று கையேடு குறிப்பிடுகிறது.

ஏஐசிடிஇ’யின் திருத்தப்பட்ட ஒழுங்குமுறை புதிய தேசிய கல்வி கொள்கைக்கு ஏற்ப உள்ளது. மாணவர்கள் தங்கள் பாடங்களைத் தேர்ந்தெடுப்பதில், குறிப்பாக மேல்நிலைப் பள்ளியில் அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்க வேண்டும் என புதிய கல்விக்கொள்கை வலியுறுத்துகிறது. இதனால் அவர்கள் தொழில் மற்றும் வாழ்க்கை பாதையை சிறப்பாக கட்டமைக்க முடியும். 

இருப்பினும், கணிதம் அனைத்து பொறியியல் படிப்புகளின் மையமாக இருப்பதால், இந்த மாற்றப்பட்ட ஒழுங்குமுறை குறித்து கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. இந்த புதிய நடவடிக்கை இந்திய பொறியியல் கல்லூரிகளில் படிப்பு முடிந்து வெளியேறும் பொறியியலாளர்களின் தரத்தில் தாக்கம் ஏற்படக் கூடும் என சிலர் வாதிடுகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி, பொறியியல் படிக்க 12’ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் கட்டாயமாகும். மத்திய அரசின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை ஜேஇஇ எனும் பொது நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் இந்த மூன்று பாடங்களில் 12’ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது.

மேலும், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் இருந்து தான் ஜேஇஇ தேர்வு நடத்தப்படுகிறது.

ஏஐசிடிஇ’யின் ஒப்புதல் செயல்முறை கையேடு 2020-2021″இன் சிறப்பம்சங்கள்

12 ஆம் வகுப்பு மாணவர்கள் பொறியியல் படிப்புகளை எடுக்க கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் கட்டாயமில்லை

இயற்பியல், கணிதம், வேதியியல், கணினி அறிவியல், மின்னணுவியல், தகவல், தொழில்நுட்பம், உயிரியல், தகவல் பயிற்சிகள், பயோடெக்னாலஜி, தொழில்நுட்ப தொழில்சார் படிப்பு, வேளாண்மை, பொறியியல், கிராபிக்ஸ், வணிக ஆய்வுகள் , தொழில்முனைவு ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் மூன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பொதுப்பிரிவு மாணவர்கள் தகுதித் தேர்வில் குறைந்தது 45% மதிப்பெண்களைப் பெற வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரிவில் உள்ள மாணவர்கள் தகுதித் தேர்வில் 40% மதிப்பெண்கள் பெற வேண்டும்.

பள்ளியில் மாறுபட்ட பாடங்களைப் பயின்ற மாணவர்களுக்கு கணிதம், இயற்பியல், பொறியியல் வரைதல் போன்றவற்றில் பல்கலைக்கழகங்களால் இணைப்பு படிப்புகள் வழங்கப்படும்.

Views: - 60

0

0