“உங்க வேலையை மட்டும் பாருங்க”..! டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை வறுத்தெடுத்த கேப்டன் அமரீந்தர் சிங்..!
3 August 2020, 8:24 amபஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாபின் போலி மதுபானம் தொடர்பான இறப்பு குறித்து சிபிஐ விசாரணை கோரியதற்காக கடுமையாக விமர்சித்துள்ளார். ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் தனது வேலையை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
அமரீந்தர் சிங் மேலும் டெல்லி முதல்வரிடம் “தனது செயல்படாத ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்களைத் தூண்டிவிட சோகமான விவகாரத்தைப் பயன்படுத்த வேண்டாம்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக இதுவரை 98 பேர் பலியாகியுள்ள பஞ்சாப் போலி மதுபானம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கெஜ்ரிவால் இன்று தனது ட்வீட்டில் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கெஜ்ரிவாலை விளாசிய அமரீந்தர் தனது அறிக்கையில், “பலர் இறந்துவிட்டனர். நீங்கள் இந்த சம்பவத்தில் அரசியல் செய்கிறீர்கள். இதற்காக நீங்கள் கொஞ்சம் கூட வெட்கப்படுவதில்லை.” என அவர் சாடியுள்ளார்.
மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலை தனது சொந்த வேலையில் மட்டும் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்ட பஞ்சாப் முதல்வர், தனது சொந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.
“கடந்த சில மாதங்களாக சட்டவிரோத போலி மதுபான வழக்குகள் எதுவும் உள்ளூர் போலீசாரால் முறையாக விசாரிக்கப்படவில்லை” என்ற கெஜ்ரிவாலின் கூற்றை குப்பைத் தொட்டியில் போடுவதாகச் சொன்ன பஞ்சாப் முதல்வர், கெஜ்ரிவாலிடம் தனது உண்மைகளை சரிபார்க்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஏப்ரல் 22’ம் தேதி கன்னாவில் ஒரு சட்டவிரோத மதுபான தொழிற்சாலை கண்டறியப்பட்டதாக மேற்கோள் காட்டிய முதல்வர், குற்றம் சாட்டப்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்டதாகவும், மேலும் ஏழு பேரை தேடி வருவதாகவும் கூறினார். மற்றொரு வழக்கில், பாட்டியாலா மாவட்டத்தில் இயங்கும் ஒரு சட்டவிரோத மதுபான முதலைகள் இந்த ஆண்டு மே 22 மற்றும் ஜூன் 13 ஆகிய தேதிகளில் கைது செய்யப்பட்டனர் எனவும் ஜூலை 10’ஆம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகவும் பஞ்சாப் முதல்வர் தெரிவித்தார்.
சட்டவிரோத கடத்தல் வழக்குகளில் குற்றவாளிகள் எனக் கருதப்படும் அனைவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறிய அமரீந்தர் சிங், போலி மதுபான சோகத்தில், மூன்று மாவட்டங்களில் ஏற்கனவே 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.
மேலும், காவல்துறை மற்றும் கலால் மற்றும் வரிவிதிப்பு துறைகளைச் சேர்ந்த 13 அதிகாரிகள் அலட்சியம் காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதே நேரத்தில் இந்த வழக்கில் அவர்கள் உடந்தையாக இருப்பதை விசாரிக்க விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
ஒரு மாஜிஸ்திரேட் விசாரணை தனது அறிக்கையை ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார். உள்ளூர் காவல்துறை அதை திறம்பட கையாளும் போது சிபிஐ இந்த வழக்கை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்று மேலும் கேள்வியெழுப்பியுள்ளார்.