முதலமைச்சருக்காக ₹2கோடி மதிப்பில் கோவில் கட்டிய எம்எல்ஏ : உண்டியலில் பணம் வேண்டாம் மனு அளித்தால் போதும்!!
Author: Udayachandran RadhaKrishnan15 August 2021, 8:31 pm
ஆந்திரா :காளகஸ்தி அருகே ஜெகன் அண்ணா நவரத்தினால நிலையம் என்ற பெயரில் கோவில் கட்டிய எம்எல்ஏ ஓய். எஸ்.ராஜசேகர் ரெட்டி உருவ சிலையுடன் அமைக்கப்பட்ட கோவிலில் பிரசாதம், உண்டியல் ஆகியவை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காளஹஸ்தி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மதுசூதன் ரெட்டி ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் முரட்டு பக்தர் ஆவார். இந்த நிலையில் காளஹஸ்தி அருகே ஜெகன் அண்ணா நவரத்தினால நிலையம் என்ற பெயரில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் மக்கள் நல திட்டங்களை விளக்கி கூறும் வகையில் கோவில் ஒன்றை கட்டியிருக்கிறார்.
சுமார் இரண்டு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அந்த கோவிலில் நவரத்தினம் என்ற பெயரில் தேர்தல் சமயத்தில் ஜெகன்மோகன் ரெட்டி மக்களுக்கு அளித்த ஒன்பது வாக்குறுதிகளை விளக்கிக் கூறும் 9 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது தவிர ஆந்திர மாநிலத்தில் விவசாயிகள் அபிவிருத்தியை தெளிவுபடுத்தும் வகையில் விவசாயி ஒருவர் மாட்டுவண்டியில் நெல் மூட்டைகளை ஏற்றி செல்வது போன்ற அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஜெகன்மோகன் ரெட்டியின் மக்கள் நல திட்டங்கள் பற்றிய துண்டு பிரசுரங்கள் பிரசாதமாக வழங்கப்படும். கோவிலில் அமைக்கப்பட்டுள்ள உண்டியலில் பொதுமக்கள் பணத்திற்கு பதிலாக தங்களுடைய தேவைகள் அடங்கிய மனுவை சமர்ப்பிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜெகன் அண்ணா நவரத்தின நிலையம் கோவிலில் முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் உருவச்சிலை மற்றும் ஜெகன் மோகன் ரெட்டி படம் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.
0
0