ஈரான் அதிபர் தேர்தலில் இப்ராகிம் ரைசி வெற்றி: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..!!

20 June 2021, 4:30 pm
Quick Share

புதுடெல்லி: ஈரான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற இப்ராகிம் ரைசிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஈரான் அதிபர் ஹசன் ரூஹானியின் பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு நள்ளிரவு 2 மணி வரை தொடர்ந்தது.

எனினும் அதிபர் தேர்தலில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டவில்லை என்றும் இதனால் குறைவான வாக்குகளே பதிவாகின என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிபர் பதவிக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இப்ராகிம் ரைசி, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் அப்தூல் நாசர் ஹெம்மாட்டி, முன்னாள் ராணுவ தளபதி முகசன் ரஜாய் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் உசேன் காஜிஜடேஹசேமி ஆகிய 4 பேர் போட்டியிட்டனர்.

இந்நிலையில் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் உடனடியாக வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கின. இதில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இப்ராகிம் ரைசி சக வேட்பாளர்கள் 3 பேரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு வெற்றி பெற்றார். தேர்தல் முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத போதும் இப்ராகிம் ரைசி வெற்றி பெற்றதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்நிலையில் ஈரான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற இப்ராகிம் ரைசிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ”ஈரான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட இப்ராகிம் ரைசிக்கு எனது வாழ்த்துக்கள். இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த அவருடன் இணைந்து பணியாற்ற எதிர்நோக்குகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Views: - 151

0

0