இடைத்தரகர்களின் ஆதிக்கத்திற்கு முடிவு..! மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பல லட்சம் பஞ்சாப் விவசாயிகளுக்கு கைமேல் பலன்..!

19 April 2021, 5:05 pm
Punjab_Modi_UpdateNews360
Quick Share

பஞ்சாபில் மோடி அரசு, ஏப்ரல் 15 வரை குறைந்தபட்ச ஆதரவு விலையில் (எம்எஸ்பி) மாநிலத்திலிருந்து 18.24 லட்சம் டன் கோதுமையை கொள்முதல் செய்துள்ளதோடு, கோதுமை கொள்முதலுக்கான விலையை பல லட்சம் விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குறைந்தபட்ச ஆதரவு விலையில் நேரடி நன்மை பரிமாற்றம் (டி.பி.டி) மூலம் பஞ்சாபில் உள்ள விவசாயிகளின் கணக்கிற்கு மொத்தம் ரூ 13.71 கோடியை மத்திய அரசு மாற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன (குவிண்டால் ஒன்றுக்கு ரூ 1,975 என்ற விலையில் அடிப்படையில்). 

2018 முதல் மோடி அரசாங்கத்தின் அனைத்து முயற்சிகளும் இருந்தபோதிலும், பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் விவசாயிகளுக்கு நேரடியாக பணம் வழங்கும் முறையை அமலாக்குவதற்கு ஒத்துழைக்காமல் மாநில அரசு விலக்கு கோரியது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று, விவசாயிகள் பஞ்சாபில் தங்கள் விளைபொருட்களுக்கான (எம்எஸ்பியில்) தொகையை நேரடியாக வங்கிக் கணக்குகளில் விரைவாகப் பெறுவது இதுவே முதல் முறை.

இது குறித்துப் பேசிய, ​​உணவுச் செயலாளர் சுதான்ஷு பாண்டே, “நாங்கள் எம்.எஸ்.பியை நேரடியாக பஞ்சாபில் உள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றிக் கொண்டிருக்கிறோம். இது மாநில அரசு மற்றும் இடைத்தரகர்களின் ஒத்துழைப்புடன் சாத்தியமானது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவுடன், முழு நாடும் இப்போது ‘ஒரு நாடு, ஒரு எம்.எஸ்.பி, ஒரு டிபிடி’ என்ற திட்டத்தின் கீழ் வந்துள்ளது. இடைத்தரகர்களும் தங்கள் கமிஷனை நேரடியாக தங்கள் கணக்கில் பெறுவார்கள்.” என்று கூறினார்.

இந்திய உணவுக் கழகம் (எஃப்.சி.ஐ) பஞ்சாபிலிருந்து 130 லட்சம் டன் கோதுமையை வாங்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு மொத்த இலக்கு 437.36 லட்சம் டன்னுடன் ஒப்பிடும்போது, ​​இதுவரை 81.64 லட்சம் டன் கோதுமை வாங்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஆதார் அட்டைகளின் அடிப்படையில், அவர்கள் மண்டிகளுக்கு கொண்டு வரும் பயிர்களின் அளவுக்கு ஏற்றவாறு விவசாயிகளுக்கு டிபிடி மூலம் பணம் செலுத்தப்படுகிறது.

ஆரம்பத்தில், பணம் பரிமாற்றத்திற்காக நில பதிவுகளை ஒப்படைக்குமாறு பஞ்சாப் அரசிடம் எஃப்.சி.ஐ கேட்டுக் கொண்டது. இருப்பினும், பல விவசாயிகள் விவசாய கூலிகளாக வேலை செய்கிறார்கள் மற்றும் அவர்களின் நிலத்தை சொந்தமாகக் கொண்டிருக்கவில்லை என்று கூறியது. பின்னர் விவசாயிகள் பற்றிய விவரங்களை வழங்க மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது (ஹரியானாவில் உள்ளதைப் போல). 

இடைத்தரகர்களின் ஏகபோகத்தை  ஒழிப்பதற்கான மத்திய அரசின் கோரிக்கைகளுக்கு பஞ்சாப் அரசாங்கம் ஒப்புதல் அளித்ததால், அது இடைத்தரகர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பைப் பெற்றது.

இதனால் பஞ்சாப் காங்கிரஸ் அரசு தயங்கினாலும், மத்திய அரசின் தொடர் அழுத்தம் மற்றும் 2022 தேர்தல் ஆகியவற்றை மனதில் வைத்து, வேறுவழியில்லாமல் இந்த திட்டத்திற்கு முழுமையாக ஒத்துழைக்க ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது.

இதில் சுவாரஸ்யமாக, பாரதிய கிசான் யூனியனின் (பி.கே.யூ) டகவுண்டாவின் பொதுச் செயலாளர் விவசாயி தலைவர் ஜக்மோகன் சிங், நேரடி பணப் பரிமாற்ற முறை ஒரு பெரிய நாளைக் குறிக்கிறது என்றார். அவர் மேலும் கூறுகையில், முதன்முறையாக, மற்றவர்களைச் சார்ந்து இல்லாமல் தனது பயிரின் விலையை விவசாயி நேரடியாக கையில் பெற்றதாகவும் கூறியுள்ளார்.

இந்த விஷயத்தைப் பற்றி பேசும்போது, ​​தலிப் குமார் என்ற 39 வயதான விவசாயி, 15 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம் செய்யத் தொடங்கியதிலிருந்து தான் இப்போது தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறினார். 

ராஜ்புரா மண்டியில் விற்கப்பட்ட 171 குவிண்டால் கோதுமைக்கு அவர் தனது வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ 1.90 லட்சம் மற்றும் ரூ 1.48 லட்சம் பெற்றிருந்தார். தலிப் குமார் 40 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டு 10 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட கோதுமையை இப்போது வரை விற்றுள்ளார். இவ்வளவு பெரிய தொகையை ஒரே நேரத்தில் பெறுவது இதுவே முதல் முறை என்று அவர் கூறினார்.

“இது சிறந்த அமைப்பு. எங்கள் கணக்கில் எங்கள் பயிருக்கு பணம் பெறுவதை விட சிறந்தது என்ன? முன்னதாக, கஇடைத் தரகர்கள் எங்களுக்கு ஒரு காசோலை கொடுப்பர். நாங்கள் எங்கள் பயிரை மண்டிக்கு எடுத்துச் சென்ற பிறகு, எல்லாம் முகவரின் கைகளில் இருந்தது. கணக்குகளின் இறுதி தீர்வுக்கு நேரம் பிடித்தது. விவசாயி தன்னிடம் இருந்த கடன்களை திருப்பிச் செலுத்திய பின்னரும் கூட பணம் செலுத்துவதைத் தள்ளிவைக்க இடைத்தரகர்கள் ஏதோ ஒரு காரணத்தை கூறி வருவது வாடிக்கையாக இருந்துள்ளது.” என்று விவசாயி விவரித்தார்.

இதேபோல், ரோப்பர் மாவட்டத்தில் உள்ள பாங்குரா கிராமத்தைச் சேர்ந்த 49 வயதான தர்லோச்சன் சிங் 3 ஏக்கர் நிலத்தில் உற்பத்தி செய்யப்படும் கோதுமையை விற்பனை செய்து ரூ 1.56 லட்சம் பெற்றார். அவர் இந்த நேரடி பணப்பரிமாற்ற முறையை ஆதரித்ததோடு, அது கமிஷன் முகவருடனான தனது உறவை பாதிக்காது என்று கூறினார்.

டெல்லியில் மத்திய அரசை எதிர்த்து பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள் தான் அதிக அளவில் போராட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில், தற்போது அவர்களில் பெரும்பாலோர் கோதுமை விளைச்சலை அரசிடம் விற்பனை செய்வதற்காக பஞ்சாப் திரும்பியுள்ளனர். அவர்கள் அனைவரும் முதல்முறையாக மத்திய அரசின் நேரடி பணப்பரிமாற்ற திட்டத்தின் நன்மையை உயர்ந்துள்ளதால், இனி மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் நீர்த்துப்போகும் எனக் கூறப்படுகிறது.

Views: - 3961

0

0