மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து விபத்து..! பத்துக்கும் மேற்பட்டோர் பலியான பரிதாபம்..!

21 September 2020, 9:39 am
Bhiwandi_Building_Collapse_UpdateNews360
Quick Share

மகாராஷ்டிராவின் பிவாண்டியில் படேல் காம்பவுண்ட் பகுதியில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது பத்து பேர் உயிர் இழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஆரம்ப அறிக்கையின்படி, 20-25 பேர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக அஞ்சுகின்றனர். 

தானே மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பிவாண்டியில் உள்ள ஜிலானி அப்பார்ட்மெண்ட் 1984’இல் கட்டப்பட்டது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் திடீரென அந்த மூன்று மாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது. இந்த நேரத்தில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததால் யாரும் உடனடியாக வெளியேறி தப்பிக்க முடியவில்லை. 

இதையடுத்து தேசிய பேரிடர் மீட்புப் படையின் (என்.டி.ஆர்.எஃப்) குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. இதுவரை 20 பேர் உள்ளூர்வாசிகளால் மீட்கப்பட்டுள்ளனர். என்.டி.ஆர்.எஃப் மீட்பு நடவடிக்கை இன்னும் நடந்து வருகிறது.

இதற்கிடையே பிவாண்டி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் இறப்பு எண்ணிக்கை பத்து ஆக உயர்ந்துள்ளது என்று தானே முனிசிபல் கார்ப்பரேஷனின் மக்கள் தொடர்பு அதிகாரி இன்று தெரிவித்துள்ளார்.

“மீட்புப் பணியாளர்கள் ஒரு குழந்தையை குப்பைகளில் இருந்து வெளியேற்றியுள்ளனர், அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்” என்று ஒரு அதிகாரி கூறினார்.

கடந்த ஆகஸ்ட் 24’ம் தேதி மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் மஹாத்தின் ஒரு குடியிருப்பு பகுதியில் ஐந்து மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தின் வடுவே மாறாத நிலையில் தற்போது இதே போல் மற்றொரு கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சம்பவத்தில் 16 பேர் உயிர் இழந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பிவாண்டியில் உள்ள குடியிருப்புகள் தணிக்கை செய்யப்பட்ட நிலையிலும் இந்த கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது மகாராஷ்டிர அரசு நிர்வாகம் மேற்கொண்ட தணிக்கைகளை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.

Views: - 8

0

0