விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மும்பையில் 10 நாட்களுக்கு 144 தடை

Author: Udhayakumar Raman
9 September 2021, 9:45 pm
Quick Share

மும்பை: விநாயகர் சதுர்த்தியையொட்டி மும்பை நாளை முதல் 19ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டில் கொரோனா தொற்றின் முதல் அலையின் காரணமாக நாடு முழுவதும் பொது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. இதனால் கடந்த ஆண்டில் எந்த பண்டிகையும் வழக்கம் போல் கொண்டாட முடியவில்லை. மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கும் நிலை இருந்தது. நடப்பாண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை தாக்கம் தொடங்கி, தீவிர கட்டுப்பாடுகளின் விளைவால் தற்போது தான் இயல்பு நிலை திரும்பி வருகிறது.நிலைமை சீரடைந்து வரும் தற்போதைய நிலையில், செப்டம்பர் 10ம் தேதி அன்று நாடு முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிறது.

நோய் பரவலை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களில் பண்டிகையை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது மும்பை நகர காவல் ஆணையரகத்தின் செய்தித்தொடர்பாளர் எஸ். சைத்தன்யா ஐ.பி.எஸ் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, செப்டம்பர் 10 முதல் 19 வரை மும்பை மாநகர காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படவுள்ளது.பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலையுடன் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி இல்லை. பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்வதற்கும் அனுமதி இல்லை. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து ஆன்லைன் மூலம் தரிசனம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பண்டிகைக்கான எதிர்பார்ப்புடன் இருந்த மக்களுக்கு காவல்துறையின் இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 171

0

0