2006’இல் காணாமல் போன பர்ஸ்..! முழுப்பணத்துடன் தற்போது மீட்டுக்கொடுத்த மும்பை ரயில்வே போலீஸ்..!

9 August 2020, 7:56 pm
Purse_UpdateNews360
Quick Share

2006’ஆம் ஆண்டில் மும்பையில் ஒரு உள்ளூர் ரயிலில் ரூ 900 அடங்கிய பணப்பையை இழந்த ஒரு நபர், 14 ஆண்டுகளுக்குப் பிறகு காவல்துறை அதை மீட்டுள்ளதைக் கேட்டு மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.

மேலும் தனது பணப்பையில் வைத்திருந்த தொகையில் ஒரு பகுதியை அவருக்கு திருப்பித் தந்ததும் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

முன்னதாக 2006’ல் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ்-பன்வெல் உள்ளூர் ரயிலில் பயணம் செய்தபோது ஹேமந்த் படல்கர் தனது பணப்பை திருடு போய்விட்டதாக அப்போது அரசு ரயில்வே போலீஸிடம் (ஜிஆர்பி) புகார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், வாஷியில் உள்ள ரயில்வே போலீசிடமிருந்து அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் அவரது பணப்பையை கண்டுபிடித்ததாக தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், கொரோனா வைரஸ் ஊரடங்கால் அவரால் தனது பணப்பையை வாங்க முடியவில்லை. கட்டுப்பாடுகளை தளர்த்திய பின்னர், நவி மும்பை டவுன்ஷிப்பில் உள்ள பன்வெல்லில் வசிக்கும் படல்கர் சமீபத்தில் வாஷியில் உள்ள ஜிஆர்பி அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு பணப்பையில் இருந்த பணத்தின் ஒரு பகுதி அவருக்கு வழங்கப்பட்டது.

“அந்த நேரத்தில் எனது பணப்பையில் ரூ 900 இருந்தது, அதில் ஒரு பழைய 500 ரூபாய் நோட்டும் இருந்தது. வாஷி ஜிஆர்பி, முத்திரை காகித வேலைக்காக ரூ 100 குறைத்து ரூ 300 என்னிடம் திருப்பித் தந்தது. மீதமுள்ள ரூ 500 அரசிடம் புதிய ரூபாய் நோட்டாக மாற்றப்பட்டு திருப்பித் தருவதாக ஜிஆர்பி அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக பதல்கர் கூறினார்.

அவர் ஜிஆர்பி அலுவலகத்திற்குச் சென்றபோது, ​​தன்னைப் போலவே திருடு போன பணத்தை சேகரிக்க வந்த பலரைக் கண்டுள்ளார். அங்கு பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் பல ஆயிரக்கணக்கில் இருந்ததைக் கண்டு அதை எவ்வாறு திரும்பப் பெறுவார்கள் என்பதைக் குறித்து ஆச்சரியப்பட்டதாகக் கூறிய படல்கர் தனது பணத்தை திரும்பப் பெறுவதில் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார். படல்கரின் பணப்பையை திருடியவர்கள் சிறிது நேரத்திற்கு முன்பு கைது செய்யப்பட்டதாக ஜிஆர்பி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து ரூ 900 அடங்கிய படல்கரின் பணப்பையை நாங்கள் மீட்டெடுத்தோம். நாங்கள் ரூ 300’ஐ தற்போது படல்கரிடம் ஒப்படைத்தோம். மீதமுள்ள ரூ 500 நாணயத்தாள் புதிதாக மாற்றப்பட்ட பிறகு அவரிடம் திருப்பித் தரப்படும்.” என்று அவர் மேலும் கூறினார்.

Views: - 9

0

0