எரிந்து போன மைசூரு கூலித் தொழிலாளியின் நூலகம்! ரூ.17 லட்சம் நிதி திரட்டிய நெட்டிசன்கள்

13 April 2021, 9:00 am
Quick Share

மைசூருவில், 65 வயது முதியவரான கூலித் தொழிலாளி ஒருவர் நடத்தி வந்த நூலகம், தீயில் அழிந்து போக, நெட்டிசன்கள் 17 லட்சம் ரூபாய் நிதி திரட்டி அவரது நூலகத்தை மீண்டும் நிறுவ உதவி செய்திருக்கின்றனர்.

இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை காலை மைசூருவில் நடந்தது. வயதான தினசரி கூலித் தொழிலாளியாக இருக்கும், சையத் இசாக் என்பவரின் நூலகம் அதிகாலையில் தீப்பிடித்து எரிந்தது. இதில் அவர் சேமித்து வைத்திருந்த 11,000 புத்தகங்கள் தீயில் கருகிப் போனது. இதனை கண்டு அவர் முற்றிலும் மனமுடைந்து போய் இருந்தார். விஷயம் கேள்விப்பட்ட அவர், தனது நூலகத்திற்கு விரைந்திருக்கிறார். ஆனால் அவர் செல்லும் முன்னே முற்றிலும் எரிந்து அழிந்து போனது.

அவரை தொந்தரவு செய்த சிலர் இந்த படுபாதக செயலை செய்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மைசூருவின் சேரிப் பகுதியில் உள்ள இந்த நூலகத்தை, கடந்த 2011 ஆம் ஆண்டு சையத் இசாக் நிறுவி இருக்கிறார். இதில், கன்னடம், ஆங்கிலம், உருது மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 17 தினசரி செய்தித்தாள்கள் இருக்கும். மேலும் இங்கு பகவத் கீதையின் 3000 பிரதிகள் மற்றும் குர்ஆன் மற்றும் புனித பைபிளின் பிரதிகளும் இருந்திருக்கின்றன.

இதுகுறித்து சையது கூறுகையில், ‘‘நான் என் குழந்தை பருவத்தில் படிக்கவில்லை. அதனால் மக்கள் படிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். இது ஒரு சேரி பகுதி. கன்னடம் மற்றும் உருது புத்தகங்களை நான் இங்கு வைத்திருந்தேன். கன்னடம் வளர்ந்து வளர வேண்டும் என்று நான் விரும்பினேன்’’ என்றார். தனது நூலகத்தை மீண்டும் நிறுவ வேண்டும் என அவர் விரும்பியது, செய்திகள் வாயிலாக சமூக வலைதளங்களில் பரவியது.

இதனையடுத்து மிஸ்பா என்ற நபர், அவருக்காக நிதி திரட்ட துவங்கினார். நெட்டிசன்கள் பலரும் உதவி செய்ய, இப்போது வரை அவருக்கு 17 லட்சம் ரூபாய் நிதி திரண்டிருக்கிறது. இதற்காக நன்றி தெரிவித்திருக்கும் சையது, “உங்கள் ஆதரவு மற்றும் பங்களிப்புகளுடன், நான் நூலகத்தை மீண்டும் கட்டுவேன். மீண்டும் மக்களுக்கு சேவை செய்வேன்” என்றார்.

Views: - 17

0

0