நாரதா மோசடி வழக்கில் அடுத்த குறி சுவேந்து அதிகாரி தான்..? மக்களவை சபாநாயகரிடம் அனுமதி பெறுவதில் சிபிஐ மும்முரம்..!

18 May 2021, 8:08 pm
suvendu_adhikari_updatenews360
Quick Share

நாரதா மோசடி வழக்கில் நான்கு அரசியல் தலைவர்கள் மீது வழக்குத் தொடர மக்களவை சபாநாயகர் ஒப்புதல் அளிக்க வேண்டி சிபிஐ காத்திருக்கிறது. இதில் பாஜகவின் தற்போதைய மேற்குவங்க சட்டசபை எதிர்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியும் உள்ளார். நாரதா மோசடி வெளிவந்தபோது இவர் திரிணாமுல் கட்சியின் எம்பியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சிபிஐ நேற்று இரண்டு மாநில அமைச்சர்களான ஃபிர்ஹாத் ஹக்கீம் மற்றும் சுப்ரதா முகர்ஜி மற்றும் எம்.எல்.ஏ மதன் மித்ரா மற்றும் முன்னாள் அமைச்சர் சோவன் சாட்டர்ஜி ஆகியோரை நாரதா ஸ்டிங் நடவடிக்கை தொடர்பான விசாரணை தொடர்பாக கைது செய்திருந்தது.

ஆளுநர் ஜகதீப் தங்கர் சமீபத்தில் நான்கு தலைவர்கள் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்கியிருந்தார். அதைத் தொடர்ந்து சிபிஐ தனது குற்றப்பத்திரிகையை இறுதி செய்து அவர்களை கைது செய்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் மற்றவர்கள் மீதும் நடவடிக்கையை தீவிரப்படுத்த சிபிஐ மக்களவை சபாநாயகரிடம் அனுமதி கோரியுள்ளது. இந்த மோசடி நடந்ததாகக் கூறப்படும் போது திரிணாமுல் கட்சி எம்.பி.க்களாக இருந்த சுவேந்து ஆதிகாரி, சவுகதா ராய், பிரசுன் பானர்ஜி மற்றும் ககாலி கோஷ் தஸ்திதார் ஆகியோரும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“இந்த விவகாரத்தில் எங்களுக்கு இன்னும் மக்களவை சபாநாயகரிடம் அனுமதி கிடைக்கவில்லை.” என்று சிபிஐ அதிகாரி ஒருவர் தெளிவுபடுத்தினார். மேலும் திரிணாமுல் கட்சியிலிருந்து வெளியேறி 2017’ல் பாஜகவில் சேர்ந்த மற்றொரு அரசியல் தலைவரான முகுல் ராய் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

Views: - 115

1

0