இனி மாநிலங்களவையிலும் மசோதாவை நிறைவேற்றுவது எளிது..! அசுர பலத்தில் பாஜக கூட்டணி..!

3 November 2020, 10:19 pm
Rajya_Sabha_UpdateNews360
Quick Share

உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தல்கள் பாஜகவை நாடாளுமன்றத்தின் மேலவையில் பலம் பொருந்திய நிலைக்கு தள்ளியுள்ளன. இதன் மூலம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மாநிலங்களவையில் பெரும்பான்மைக்கு மிக அருகில் நிற்கிறது. மறுபுறம், மாநிலங்களவையில் காங்கிரஸ் அதன் மிகக் குறைந்த பலத்தை எட்டியுள்ளது.

உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் பதினொரு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடந்தன. அனைத்து வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் மூலம் பாஜகவுக்கு மாநிலங்களவையில் 92 எம்.பி.க்கள் கிடைத்துள்ளனர்.

மறுபுறம், காங்கிரஸ் கடந்த தசாப்தங்களில் அது ஆதிக்கம் செலுத்திய மாநிலங்களவையில் அதன் மிகக் குறைந்த எண்ணிக்கையாக 38’ஐ எட்டியுள்ளது. இதன் மூலம், மூன்று விவசாய மசோதாக்களில் சமீபத்தில் காணப்பட்டதைப் போலல்லாமல், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்திற்கு குறைவான பிரச்சினைகள் இருக்கும்.

பெரும்பான்மைக்கு மிக அருகில் தேசிய ஜனநாயகக் கூட்டணி :
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவின் 92 இடங்களைத் தவிர, அதிமுகவில் 9 எம்.பி.க்கள் உள்ளனர். ஐக்கிய ஜனதா தளத்துக்கு மாநிலங்களவையில் 5 இடங்கள் உள்ளன. 

மற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளான ஆர்.பி.ஐ-அத்வாலே, அசாம் கண பரிஷத், மிசோ தேசிய முன்னணி, தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் போடோலாண்ட் மக்கள் முன்னணி ஆகியவை மேல் சபையில் தலா ஒரு எம்பிக்களை கொண்டுள்ளனர்.

இது மாநிலங்களவையில் மொத்த தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களின் எண்ணிக்கையை 111’ஆகக் கொண்டுள்ளது. இது மாநிலங்களவையில் பெரும்பான்மையைக் காட்டிலும் 12 குறைவு. தற்போது, ​​மாநிலங்களவையில் 242 உறுப்பினர்கள் உள்ள நிலையில் பெரும்பான்மைக்கு 121 உறுப்பினர்கள் தேவை.

மேலும் பிஜு ஜனதா தளம், டிஆர்எஸ் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.சி.பி உடன் தேசிய ஜனநாயக கூட்டணி நல்ல புரிதலைக் கொண்டிருப்பதால் மாநிலங்களவையில் பெரும்பான்மையை அடைவது கடினம் அல்ல. பிஜு ஜனதா தளத்தின் 9 எம்பிக்கள், டிஆர்எஸ் 7 எம்பிக்கள் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.சி.பி. 6 எம்பிக்களை ராஜ்யசபாவில் கொண்டுள்ளது.

இது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை மாநிலங்களவையில் ஒரு வசதியான நிலையில் 133 எம்.பி.க்களின் ஆதரவுடன் அசுரர் பலத்துடன் வைத்துள்ளது.

பலவீனமடைந்த எதிர்க்கட்சிகள் :
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மாநிலங்களவையில் பெரும்பான்மைக்கு அருகில் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சி எண்ணிக்கையில் மிகவும் பலவீனமாக நிற்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு இப்போது மாநிலங்களவையில் 62 எம்.பி.க்கள் உள்ளனர்.

கடந்த மூன்று தசாப்தங்களில் எந்த அரசியல் கூட்டணியும் மாநிலங்களவையில் தனக்கு சொந்தமான பெரும்பான்மையை எட்டவில்லை என்ற பார்வையில் இது குறிப்பிடத்தக்கதாகும். 1990 தசாப்தங்களுக்கு முன்னர் காங்கிரஸ் மாநிலங்களவையில் பெரும்பான்மையை அனுபவித்தது குறிப்பிடத்தக்கது.

புதிய மாற்றத்திற்கு பங்களித்த உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் :
உத்தரபிரதேசம் 31 எம்.பி.க்களை மாநிலங்களவைக்கு அனுப்புகிறது. நடப்பு தேர்தலில் எட்டு பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், கட்சிக்கு இப்போது உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 22 ராஜ்யசபா உறுப்பினர்கள் உள்ளனர்.

தேர்தலில் ஒரு மாநிலங்களவை இடத்தை வென்ற சமாஜ்வாடி கட்சிக்கு இப்போது ஐந்து எம்.பி.க்கள் உள்ளனர். சுயேட்சை வேட்பாளரின் ஆவணங்கள் நிராகரிக்கப்பட்ட பின்னர் ஒரு இடத்தை வெல்ல முடிந்த பகுஜன் சமாஜ் கட்சிக்கு இப்போது மாநிலங்களவையில் மூன்று எம்.பி.க்கள் உள்ளனர்.

மாநிலங்களவையில் உத்தரபிரதேசத்திலிருந்து காங்கிரசுக்கு ஒரு இடம் உள்ளது. நடப்பு தேர்தலில் உத்தரகண்ட் மாநிலத்திலிருந்து ஒரு இடைத்ததையும் பாஜக வென்றுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் ஆளும் பாஜக, மாநிலத்திலிருந்து மூன்று மாநிலங்களவை இடங்களில் இரண்டைக் கொண்டுள்ளது.

எனினும் தற்போது மாநிலங்களவையில் மூன்று காலியிடங்கள் உள்ளன. இதில் இரண்டு பீகாரிலிருந்தும், மற்றொன்று கர்நாடகாவிலிருந்தும் உள்ளது. பாஜக ஆட்சி செய்யும் கர்நாடகாவில் வெற்றியைப் பெறுவது உறுதி என்றாலும், நடந்து வரும் பீகார் தேர்தல் முடிவடைந்த பிறகு தான் இரு மாநிலங்களவை இடங்கள் எவ்வாறு பிரிக்கப்படுகின்றன என்பது தீர்மானிக்கப்படும்.

இந்த புதிய மாற்றத்தினால் இனி மக்களவையைப் போல் மாநிலங்களவையில், எதிர்க்கட்சிகளின் சலசலப்புக்கு அஞ்சாமல் மசோதாக்களை எளிதாக நிறைவேற்ற முடியும்.

Views: - 26

0

0

1 thought on “இனி மாநிலங்களவையிலும் மசோதாவை நிறைவேற்றுவது எளிது..! அசுர பலத்தில் பாஜக கூட்டணி..!

Comments are closed.