“தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் வரும் சூழல் இல்லை” – பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் விளக்கம்..!

27 August 2020, 3:27 pm
Quick Share

பஞ்சாபில் தேர்வு மையங்களுக்கு சென்று மாணவர்கள் தேர்வெழுதும் சூழ்நிலை இல்லை என்று அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் கூறியுள்ளார்.

மருத்துவ படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான நீட் நுழைவுத்தேர்வு வருகிற செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்வை இந்தியா முழுவதும் 16 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதவுள்ளனர். இதேபோல் ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான ஜே.இ.இ. மெயின் நுழைவுத்தேர்வும் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்வை ஒத்திவைக்க கோரி தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதேபோல் இந்த தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமையும், தேர்வு அட்டவணையை மாற்ற முடியாது என்று கூறிவிட்டது.

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது. ஆனால், பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறையாததால் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இருப்பினும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், பஞ்சாபில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க 2 நாட்களே உள்ளது.

23 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கே இந்த கதி ஏற்பட்டுள்ளது எனில், நிலைமை எப்படி உள்ளது என நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும். தேர்வு மையங்களுக்கு சென்று மாணவர்கள் தேர்வெழுதும் சூழ்நிலை இல்லை. எனவே, நீட்மற்றும் ஜேஇஇ போன்ற தேர்வுகளை ஆன்லைனில் நடத்தலாம்.

இதற்கு அரசு ஒப்புக்கொள்ளும் என்று நினைக்கிறேன். முன்னதாக பல்வேறு தொழில்முறை தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டன. கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் உள்ள நாடுகள் ஆன்லைன் தேர்வு முறையை பின்பற்றி வரும்போது இங்கு மட்டும் ஏன் நடத்த முடியாது?, என கேள்வி எழுப்பியுள்ளார்.