எல்லையில் பனிச்சரிவு குறித்து ஆய்வு செய்ய டிஆர்டிஓவில் புதிய ஆய்வகம் அமைப்பு..!
1 December 2020, 4:09 pmடிஆர்டிஓ நிறுவனத்தை மேலும் மெருகேற்றும் விதமாக, டிஆர்டிஓவில் மேற்கொள்ளப்பட வேண்டிய பெரிய அளவிலான சீர்திருத்தங்களின் முதல் கட்டத்தில், மத்திய அரசு இரண்டு டிஆர்டிஓ ஆய்வகங்களை ஒன்றிணைத்து சீனா மற்றும் பாகிஸ்தானுடனான எல்லைகளில் பனிச்சரிவு உள்ளிட்ட மலைப்பாங்கான நிலப்பரப்பை மையமாகக் கொண்டு ஆராய்ச்சி செய்ய புதிய ஆய்வகம் ஒன்றை உருவாக்கியுள்ளது.
அரசாங்கத்தால் இணைக்கப்பட்ட இரண்டு புதிய ஆய்வகங்கள் மணாலியை தலைமையிடமாகக் கொண்டு பனி மற்றும் பனிச்சரிவு ஆய்வுகள் ஸ்தாபனம் (எஸ்ஏஎஸ்இ), மற்றொன்று டெல்லியை தளமாகக் கொண்ட பாதுகாப்பு நிலப்பரப்பு ஆராய்ச்சி ஸ்தாபனம் ஆகும்.
“பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) இந்த இரண்டு ஆய்வகங்களை ஒன்றிணைத்து பாதுகாப்பு புவி-தகவல் ஆராய்ச்சி நிறுவனம் என்ற புதிய ஆய்வகத்தை உருவாக்கியுள்ளது. புதிய ஆய்வகம் லடாக் முதல் அருணாச்சல பிரதேசம் வரையிலான சீனாவின் எல்லையில் நிலப்பரப்பு மற்றும் பனிச்சரிவுகள் குறித்த ஆராய்ச்சியில் கவனம் செலுத்தும்.” என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மணாலியை தளமாகக் கொண்ட எஸ்ஏஎஸ்இ செயல்பாட்டு பகுதிகளில் பனி மற்றும் பனிச்சரிவுகளை ஆய்வு செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதுடன், நாட்டின் பல்வேறு எல்லைப் பகுதிகளிலும் ஆயுதப்படைகள் நிறுத்தப்பட்டுள்ள ஏறக்குறைய 3,000 சாலை இடங்களில் ஒரு பனிச்சரிவு வரைபடத்தை தயார் செய்துள்ளது.
இதேபோல், பாதுகாப்பு நிலப்பரப்பு ஆராய்ச்சி ஆய்வகம் (டி.டி.ஆர்.எல்) ஆயுதப்படைகள் நிறுத்தப்பட்டுள்ள வெவ்வேறு நிலப்பரப்புகளில் செயல்பட்டு வந்தது.
புதிய ஆய்வகம் அருணாச்சல பிரதேசம் போன்ற சீனாவின் எல்லையின் பல்வேறு பகுதிகளிலும் தனது குழுக்களை விரிவுபடுத்தி அங்கு நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு படையினருடன் இணைந்து செயல்படும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
டிஆர்டிஓவை சீர்திருத்துவதற்கான முதல் படி
பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவை சகாக்கள், டிஆர்டிஓ தலைவர் மற்றும் பாதுகாப்பு படைகளின் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் டிஆர்டிஓ குறித்து விரிவான மறுஆய்வுக் கூட்டத்தை நடத்திய பின்னர் இந்த அறிவிப்பு வருவது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு டிஆர்டிஓ தலைவர் டாக்டர் ஜி.சதீஷ் ரெட்டிக்கு பதவி நீட்டிப்பையும் வழங்கியுள்ளதுடன், முதன்மையான பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் பணியை அவரிடம் ஒப்படைத்துள்ளது.
0
0