காஷ்மீரின் தற்போதைய நிலவரம்… சுற்றிப்பார்த்த வெளிநாட்டு தூதர்கள் கூறுவது என்ன?

14 February 2020, 5:06 pm
JK Envoys trip updatenews360
Quick Share

காஷ்மீரில் சற்று சிரமமான நிலை இருந்தாலும், இயல்பு நிலை திரும்பி வருகிறது; முன்னேற்றம் காணப்படுவதாக, அங்கு சென்று திரும்பிய வெளிநாட்டு தூதர்கள் தெரிவித்தனர்.

மத்திய அரசு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்தாண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி ரத்து செய்தது. அதன் பிறகு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதே நேரம் காஷ்மீரின் வளர்ச்சிக்காக பல ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி, வளர்ச்சிப் பணிகளுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காஷ்மீரின் தற்போதைய நிலையை ஆராய்வதற்காக, 20 நாடுகளை சேர்ந்த தூதர்கள் அடங்கிய குழு, ஜம்மு காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. பல இடங்களுக்கும் சென்று, நிலைமையை நேரில் ஆராய்ந்தது.

மேலும், வெளி நாட்டு தூதுக்குழுவினர், காஷ்மீர் பொதுமக்களை சந்தித்து உரையாடியதுடன், உள்ளூர் பத்திரிகையாளர்களுடனும் கலந்து பேசியது. அத்துடன், புகழ்பெற்ற ஸ்ரீநகர் தால்  ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

வெளிநாட்டு குழுவினரை, ராணுவ தளபதி லெப்டினென்ட் கே. ஜே எஸ் தில்லான்  அழைத்துச் சென்று நிலைமைகளிய விளக்கினார். வெளிநாட்டு தூதர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி  கீதா மிட்டலை  சந்தித்து பேசினர்.

காஷ்மீரின் தற்போதைய சூழல் குறித்து ஆப்கானிஸ்தான் தூதர் நயீம் தார் கத்ரி கூறுகையில், காஷ்மீர் மிக நன்றாக உள்ளது என்றார். டொமினிகன் நாட்டு தூதர் ஃபிராங்க் ஹன்ஸ், காஷ்மீர் அழகான சுற்றுலாத் தலம். மிகவும் இயல்பாக உள்ளது என்றார்.

மெக்சிகோ தூதர் எஃப்.எஸ். லோட்ஃப் கூறுகையில், காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொண்டோம். இயல்புநிலை திரும்பி வருகிறது. சிரமமான சூழல் இல்லை என்று கூற முடியாது. ஆனால், நிலைமை முன்னேறி வருகிறது என்றார்.

இதனிடையே, மோசமான வானிலை என்று கூறி காஷ்மீரின் பதற்றமான சில பகுதிகளுக்கு தூதுக்குழுவினரை அரசு அழைத்துச் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

காஷ்மீரை சுற்றிப்பார்க்கும் 3வது வெளிநாட்டு குழு இதுவாகும். ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியக்குழு மற்றும் அமெரிக்க குழு காஷ்மீருக்கு சென்றது.

Leave a Reply