புல்வாமா தாக்குதலின் மூளையாக செயல்பட்டது இந்த ஆள் தான்..! 5,000 பக்க குற்றப்பத்திரிகையில் என்ஐஏ தகவல்..!

25 August 2020, 4:47 pm
pulwama_attack_updatenews360
Quick Share

தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், 2019 பிப்ரவரி புல்வாமா பயங்கரவாத தாக்குதலின் முக்கிய சதிகாரர்களாக ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார், அவரது சகோதரர் அப்துல் ரவூப் அஸ்கர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த இருவரையும் தவிர, கொல்லப்பட்ட பயங்கரவாதி முகமது உமர் பாரூக், தற்கொலை தாக்குதல் தீவிரவாதி ஆதில் அகமது தார் மற்றும் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் உயர்மட்ட பயங்கரவாத தளபதிகள் ஆகியோரையும் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என என்ஐஏ பெயரிட்டுள்ளது.

ஜம்முவில் உள்ள சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் 5,000 பக்க குற்றப்பத்திரிகையில் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் கைது செய்யப்பட்ட 6 பேரை பெயரிட்டுள்ளது.

புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி வெடிகுண்டு ஏற்றிய காரை மோதியதில், பிப்ரவரி 14, 2019 அன்று 40 சிஆர்பிஎஃப் ஊழியர்கள் உயிர் இழந்தனர்.

இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கை உறுதிப்படுத்தும் விதமாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் அழைப்பு விவரங்கள் போன்ற மறுக்கமுடியாத ஆதாரங்கள் அனைத்தும் குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலை நடத்துவதற்காக ஜெய்ஷ் பயங்கரவாதிகள் செய்த பண பரிவர்த்தனைக்கான அனைத்து டிஜிட்டல் மற்றும் அறிவியல் ஆதாரங்களும் இதில் உள்ளன.

குற்றப்பத்திரிகையில் பெயரிடப்பட்ட மற்ற கைது செய்யப்பட்டவர்கள் முகமது இக்பால் ரதர், வைஸ்-உல்-இஸ்லாம், தந்தை-மகள் இரட்டையர் தாரிக் அஹ்மத் ஷா மற்றும் இன்ஷா ஜான் என அனைவருமே ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களே என்பது உறுதியாகியுள்ளது.

ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட முகமது இக்பால், ஏப்ரல் 2018’இல் ஜம்மு பிராந்தியத்தில் உள்ள இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பின்னர் முகமது உமர் பாரூக்கின் இயக்கத்திற்கு வசதி செய்ததாக கூறப்படுகிறது.

தாக்குதலை நிறைவேற்றுவதை கண்காணித்த ஃபாரூக் இந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த ஒரு மோதலில் அவர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.