சத்தீஸ்கர் வனப்பகுதியில் நிலக்கரிச் சுரங்க பணிகள் ரத்து..! மாநில அரசின் கோரிக்கைக்கு செவி சாய்த்தது மத்திய அரசு..!

1 August 2020, 2:15 pm
Jharia_Mining_UpdateNews360
Quick Share

நாட்டின் மிக அழகிய வனப்பகுதிகளில் ஒன்றான ஹஸ்டியோ அராண்டில் உள்ள ஐந்து நிலக்கரித் தொகுதிகள் மற்றும் பிற உயிர் பன்முகத்தன்மை நிறைந்த பகுதிகளை வணிகத்திலிருந்து விலக்க சத்தீஸ்கர் அரசாங்கத்தின் திட்டத்தை மத்திய நிலக்கரி அமைச்சகம் ஏற்றுக்கொண்டதாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்தார். அதே சமயத்தில் நாட்டின் நிலக்கரி இறக்குமதி செலவைக் குறைக்கும் முயற்சியில் மூன்று புதிய தொகுதிகளை சேர்க்கவும் ஒப்புக் கொண்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 17 அன்று தனியார் நிலக்கரி சுரங்கத்திற்காக 41 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதாக அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் அரசு உச்சநீதிமன்றத்தை அணுகி ஏலம் தொடர்பான முடிவு குறித்து மாநில அரசுகளிடம் ஆலோசிக்கவில்லை என ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கர் அரசாங்கமும் ஆட்சேபனை தெரிவித்ததோடு, பல்லுயிர் நிறைந்த காடுகளின் ஒரு பகுதியாக இருக்கும் ஹஸ்டியோ அராண்ட், லெம்ரு யானை இருப்பு மற்றும் மாண்ட் நதி நீர்ப்பிடிப்பு பகுதி ஆகியவற்றின் கீழ் வரும் நிலக்கரித் தொகுதிகளை ஏலம் விட அனுமதிக்க வேண்டாம் என்று நிலக்கரி அமைச்சகத்திடம் கோரியிருந்தது.

இதற்கிடையே வியாழக்கிழமை, ஜோஷி ஜார்கண்ட் அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்து, தனியாருக்கு ஏலம் விடும் நடைமுறை குறித்து விவாதித்தார்.

பின்னர், வணிகச் சுரங்கங்கள் தொடர்பான தனது அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் கோரியதாக அவர் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.

பற்றாக்குறை காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 250 மில்லியன் டன் நிலக்கரியை இந்தியா இறக்குமதி செய்வதால் ஆண்டு தோறும் பலகோடி ரூபாய் அந்நியச்செலாவணி வீணாக்குவது குறிப்பிடத்தக்கது.

வணிக சுரங்கத்திற்காக நிலக்கரித் தொகுதிகளைத் தனியாருக்கு திறப்பதன் மூலம் பற்றாக்குறையை ஈடுசெய்ய மத்திய அரசு விரும்புகிறது என்று ஜோஷி மேலும் கூறினார்.

எனினும், ஹேமந்த் சோரன் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல், இந்த விவகாரத்தை மாநில அரசுகளுடன் மத்திய அரசு விவாதித்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பின்னர் நேற்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலைச் சந்தித்த ஜோஷி, சர்ச்சைக்குரிய ஐந்து நிலக்கரித் தொகுதிகளை ரத்து செய்து மூன்று புதிய தொகுதிகளை இணைக்க ஒப்புக் கொண்டார். இது மாநில அரசின் ஆலோசனையின் படி ஏலத்திற்கான பட்டியலில் சேர்க்கப்படும்.

“தற்போது, சத்தீஸ்கரில் வணிக சுரங்கத்திற்காக ஏலத்தில் வைக்கப்பட்டுள்ள மொத்த நிலக்கரி தொகுதிகள் ஏழு. இந்த பட்டியலில் மூன்று புதிய நிலக்கரி தொகுதிகள் சேர்க்கப்படும்.” என்று அமைச்சர் கூறினார்.

முன்னதாக ஜூன் 20 அன்று, ஜோஷிக்கு எழுதிய கடிதத்தில், சத்தீஸ்கர் வனத்துறை அமைச்சர் முகமது அக்பர், “ஹஸ்டியோ அராண்ட் மற்றும் மாண்ட் நதி பகுதிகளுக்கு இடையிலான நிலக்கரித் தொகுதியும் மத்திய அரசால் ஏலத்திற்கு முன்மொழியப்பட்டது.

இருப்பினும், சமீபத்தில், இந்த பகுதியில் யானைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. காட்டு யானைகளுக்கு வாழ்விடத்தை வழங்குவதற்காக, ஹஸ்டியோ ஆற்றைச் சுற்றியுள்ள 1,995 சதுர கிலோமீட்டர் வனப்பகுதி லெம்ரு யானைக் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பை வெளியிடுவதற்கான செயல்முறை தொடங்கியுள்ளது.” என்று தெரிவித்திருந்தார்.

மனித-யானை மோதலால் மனித உயிர்கள் பறிபோகாமல் இருக்க இந்த பகுதியில் வணிக சுரங்கத்தை நிறுத்த வேண்டும் என்று அக்பர் கூறினார்.

முதல்வர் பாகேலுடனான சந்திப்பு சாதகமானது என்றும் வர்த்தக நிலக்கரி சுரங்கத்தைத் தொடங்குவது சத்தீஸ்கரில் வளர்ச்சியின் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் என்றும் ஜோஷி கூறினார்.

வணிக நிலக்கரி சுரங்கத்தின் கீழ், ஒரு வருடத்தில் மாநிலத்திற்கு குறைந்தபட்சம் ரூ 4,400 கோடி வருவாய் கிடைக்கும். இது சுமார் 60,000 கூடுதல் வேலைவாய்ப்பையும் உருவாக்கும். கூடுதலாக, வணிக நிலக்கரிச் சுரங்கமானது மாநிலத்தின் பல்வேறு மாவட்ட கனிம அறக்கட்டளை நிதிகளுக்கு சுமார் 25 கோடி ரூபாய் பங்களிக்கும். இதை நிலக்கரிச் சுரங்கங்களைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கிய வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம்.” என்று ஜோஷி கூறினார்.

Views: - 0

0

0