திருமண பத்திரிக்கையில் விவசாயிகளுக்கு ஆதரவு; அசத்தும் ஹரியானா மக்கள்
7 February 2021, 8:43 amதிருமண அழைப்பிதழ்களில், ‘விவசாயிகள் இல்லாவிட்டால் உணவு இல்லை’ உள்ளிட்ட பல வாசகங்களை அச்சிட்டும், விவசாயிகளின் புகைப்படங்களை பிரிண்ட் செய்தும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஹரியானா மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த திருமண பத்திரிக்கை, சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உடன்பாடு எட்டப்படாததால், விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. விவசாயிகளின் போராட்டத்திற்கு, ஹரியானா மாநில மக்களில் சிலர், தங்கள் ஆதரவை தெரிவிக்கும் பொருட்டு, திருமண பத்திரிக்கையில் விவசாயிகளுக்க ஆதரவான வாக்கியங்களை அச்சிட்டு வழங்கி வருகின்றனர். மேலும், விவசாயிகளின் புகைப்படங்களை பத்திரிக்கைகளில் அச்சிட்டும், வித்தியாசமான முறையில் போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை பதிவு செய்கின்றனர்.
திருமண பத்திரிக்கைகளில், ‘விவசாயிகள் இல்லாவிட்டால் நமக்கு உணவு இல்லை’ என்ற வாசகங்களும், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், விவசாயிகளுக்காக போராடி உயிர் நீத்த விவசாயியான சர் சோட்டு ராம் மற்றும் பகத்சிங் ஆகியோரின் புகைப்படங்களை பத்திரிக்கைகளில் அச்சிட்டு எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
தனது மகனின் திருமண பத்திரிக்கையை அவ்வாறு அச்சிட்ட பிரேம்சிங் என்பவர் கூறுகையில், ‘‘வேளாண் சட்டங்களுக்கு எதிராக, ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு பின்னால் நாங்கள் இருக்கிறோம் என்பதை அனைவருக்கும் தெரிவிப்பதற்காக, என் மகனின் திருமண பத்திரிக்கையை இவ்வாறு தயார் செய்தேன்.’’ என்றார்.
அவர்கள் அச்சிட்டு வழங்கிய இந்த பத்திரக்கைகள், சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது. ஹரியானா மக்களின் இந்த வித்தியாச முயற்சிக்கு, நெட்டிசன்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
0
0