உரிய அனுமதியில்லாமல் மாநிலம் முழுவதும் பந்த் நடத்த யாரும் அழைப்பு விடுக்கக்கூடாது : கேரள உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
23 September 2022, 1:18 pm

முழு அடைப்பிற்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி கேரள அரசுக்கு ஐகோர்ட்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கேரளா உள்பட 15 மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய மத அமைப்பு தொடர்புடைய 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று சோதனை நடத்தியது.

இந்த சோதனையில் 106 பேர் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக, கேரளாவில் அதிகபட்சமாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, என்.ஐ.ஏ அதிகாரிகளின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் இன்று கேரளாவில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு நடைபெறும் என பிஎப்ஐ அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது. முழு அடைப்பு அழைப்பை தொடர்ந்து அம்மாநிலத்தின் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.

மாநிலத்தின் பல பகுதிகளில் பிஎப்ஐ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முழு அடைப்பு போராட்டத்தின் போது, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வன்முறை சம்பங்கள் அரங்கேறி வருகிறது.

பேருந்துகள், கார்கள், ஆட்டோகள் என பல வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. கடைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதேபோல், கன்னூர் மாவட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்நிலையில், பிஎப்ஐ அமைப்பு சார்பில் கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது தொடர்பாக கேரள ஐகோர்ட்டு இன்று தாமாக முன்வந்து வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டது.

அப்போது, முழு அடைப்பிற்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி கேரள அரசுக்கு ஐகோர்ட்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.

உரிய அனுமதியின்றி யாரும் மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கக்கூடாது என தெரிவித்த கோர்ட்டு அனைத்து வகையான வன்முறையும் தடுக்க மாநில அரசு அனைத்து நடவடிக்கையும் எடுக்க உத்தரவிட்டது.

பிஎப்ஐ போராட்டத்திற்கு பின் கைது நடவடிக்கை என்பது சரியல்ல என தெரிவித்த கோர்ட்டு முழு அடைப்புக்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?