“இது சரியல்ல”..! பட்டாசு தடை குறித்து ஆர்எஸ்எஸின் துணை அமைப்பு அதிருப்தி..!

7 November 2020, 1:33 pm
firecrackers_updatenews360
Quick Share

தீபாவளி தினத்தன்று பட்டாசு விற்பனைக்கு முழுமையான தடை விதிக்க வேண்டாம் என்று ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்பான சுதேசி ஜாக்ரான் மன்ச் (எஸ்.ஜே.எம்) மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளது.

எஸ்.ஜே.எம் அமைப்பைச் சார்ந்த அஸ்வானி மகாஜன், தீபாவளிக்கு முன்னதாக அனைத்து வகையான பட்டாசுகளையும் எந்த உண்மை தகவல்களும் இல்லாமல் தடை செய்வது போன்ற நடவடிக்கைகளை அரசாங்கங்கள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

பட்டாசுகளால் ஏற்படும் மாசுபாடு முதன்மையாக சீனாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பட்டாசுகளால் தான் என்பதை அரசாங்கங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

“சீன பட்டாசுகளில் பொட்டாசியம் நைட்ரேட் மற்றும் கந்தகம் கலந்ததால் மாசு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இன்று இந்தியாவில் தயாரிக்கப்படும் பசுமை பட்டாசுகளில், பொட்டாசியம் நைட்ரேட் மற்றும் கந்தகம் கலக்கப்படவில்லை. மேலும் அலுமினியம், லித்தியம், ஆர்சனிக் மற்றும் பாதரசம் போன்ற பிற மாசுபடுத்திகள் போன்றவை குறைக்கப்பட்டுள்ளன.” என்று அவர் கூறினார். 

இந்த பட்டாசுகள் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலால் சான்றளிக்கப்பட்டன என்றும் குறைந்தபட்சம் 30 சதவீதம் குறைவான மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன என்றும் மகாஜன் கூறினார்.

“சீன பட்டாசுகளுக்கு இந்திய அரசு ஒரு பயனுள்ள தடையை விதித்துள்ளதால், தீபாவளிக்கு அனைத்து வகையான பட்டாசுக்கும் தடை விதிப்பது முற்றிலும் நியாயமற்றது” என்று அவர் கூறினார்.

கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்களின் வாழ்வாதாரம் பட்டாசுத் தொழிலைச் சார்ந்தது என்று மகாஜன் வாதிட்டார். பட்டாசுகளை தடை செய்வது அவர்களை பாதிக்கும் என்று அவர் கூறினார்.

“இந்த தொழிலாளர்கள் தீபாவளியின் போது தங்கள் பட்டாசுகளை விற்கக் காத்திருக்கிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், எந்தவொரு அறிவியல் அடிப்படையுமின்றி மாசு குறைவாக இருக்கும் பசுமை பட்டாசுகளை தடை செய்வது விவேகமான நடவடிக்கையல்ல” என்று அவர் கூறினார்.

எஸ்.ஜே.எம் தலைவர் மோடி அரசாங்கத்தின் தலையீட்டையும் இதில் நாடியுள்ளார். மேலும் பசுமை பட்டாசுகளின் உண்மையான மாசு விளைவுகள் குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

பல வட மாநிலங்களும் நகரங்களும் தீபாவளிக்கு முன்னதாக பட்டாசு விற்பனைக்கு தடை விதித்துள்ளன. இந்த பட்டியலில் கர்நாடகா, மேற்கு வங்கம், டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், சண்டிகர் மற்றும் மும்பை நகரம் அடங்கும்.

Views: - 19

0

0