ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா: முன்பதிவு கட்டாயம் என அறிவிப்பு..!!
30 January 2021, 12:28 pmதிருவனந்தபுரம்: பிப்ரவரி 27ம் தேதி நடக்கும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழாவுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கே அனுமதி என கேரள அரசு அறிவித்துள்ளது.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இக்கோவிலில் மாசி மாதம் பொங்காலை விழா மிகவும் விமரிசையாக நடைபெறும். பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் இக்கோவிலுக்கு தமிழகத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் செல்வார்கள். இங்கு நடைபெறும் பொங்கால் விழாவில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபாடு நடத்துகின்றனர்.
கடந்த 2017ம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். இது உலக சாதனையாக கருதப்பட்டது. இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா அடுத்த மாதம் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், திருவனந்தபுரம் மேயர் ஆரியா ராஜேந்திரன், போலீஸ் கமிஷனர் பல்ராம் குமார் உபாத்யா மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கேரளாவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் பொங்கல் விழாவில் பங்கேற்பவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்த ஆண்டு பொங்காலை விழாவில் பங்கேற்க ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே பொங்கலிட அனுமதி வழங்க வேண்டும். எத்தனை நபர்களுக்கு அனுமதி வழங்குவது என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். பொது இடங்களில் எக் காரணம் கொண்டும் பொங்கல் வைக்க அனுமதிக்கக்கூடாது போன்ற தீர்மானங்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அதே நேரம் பக்தர்கள் அவரவர் வீடுகளில் பொங்கல் வைத்து வழிபட எந்த தடையும் இல்லை. கொரோனா பரவலை கட்டுப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
0
0