ரூ.300 ஆன்லைன் டிக்கெட் இருந்தால் மட்டுமே அனுமதி : திருப்பதி தேவஸ்தானம் முடிவு!!

11 September 2020, 7:50 pm
Thirupathi Devasthanam- updatenews360
Quick Share

திருப்பதி : ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை உடன் எடுத்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே பிரம்மோற்சவ நாட்களில் திருப்பதி மலைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு துறை தலைமை அதிகாரி கோபிநாத் , திருப்பதி எஸ் பி ரமேஷ் ரெட்டி ஆகியோர் திருப்பதி மலையில் உள்ள கூட்ட அரங்கில் இம்மாதம் 19ஆம் தேதி துவங்கி ஒன்பது நாட்கள் நடைபெற இருக்கும் வருடாந்திர பிரம்மோற்சவத்திற்கான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஆகியவை பற்றி ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்திற்கு பின் நிருபர்களிடம் பேசிய தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு துறை தலைமை அதிகாரி கோபிநாத் , கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்து உடன் எடுத்து வரும் பக்தர்கள் மட்டுமே பிரம்மோற்சவ நாட்களில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல அனுமதி அளிக்கப்படும் என்று கூறினார்.

மேலும் வர இருக்கும் புரட்டாசி மாதம் தமிழ்நாட்டிலிருந்து அதிகளவிலான பக்தர்கள் திருப்பதி மலையில் வந்து குவியும் மாதம் ஆகும். புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். எனவே ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்ட 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை உடன் எடுத்து வந்தால் மட்டுமே திருப்பதி மலைக்கு செல்ல முடியும் என்பது பற்றி தமிழ்நாட்டில் விரிவான அளவில் பிரச்சாரம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இலவச தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை பக்தர்கள் கவனிக்க வேண்டும். ஆந்திர மாநிலம் அந்தர்வேதியில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் தேர் எரிந்து சாம்பலான விவகாரம் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. எனவே தேவஸ்தானத்திற்கு சொந்தமாக இருக்கும் 49 கோவில்களில் 20 கோவில்களுக்கு இருக்கும் தேர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அப்போது கூறினார்.

Views: - 1

0

0