“ஆமாம் சாமி” நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு..! பிரஷாந்த் கிஷோரின் நடவடிக்கையால் மம்தா கட்சிக்குள் அதிகரிக்கும் கலகக் குரல்கள்..!

19 November 2020, 5:24 pm
Mamata_Prashant_UpdateNews360
Quick Share

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் (டி.எம்.சி) தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில், கட்சியின் மேலும் இரண்டு மூத்த சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் வல்லுநர் பிரசாந்த் கிஷோருக்கு எதிராகப் பேசியுள்ளனர். கடந்த மாதம் கிளர்ச்சியாளராக முத்திரை குத்தப்பட்ட மூன்றில் ஒரு பகுதியினர், மம்தா பானர்ஜி தற்போது சுய கட்டுப்பாட்டில் இல்லை என்று கூறி வருவது கட்சிக்குள் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக போக்குவரத்து அமைச்சர் சுவேந்து ஆதிகாரியைப் போலவே, இந்த சட்டமன்ற உறுப்பினர்களும் கிளர்ந்தெழுந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கிஷோரின் பரிந்துரையின் பேரில் கட்சி விஷயங்கள் முடிவு செய்யப்படுவதால் கொதித்துப் போய் உள்ளனர்.

கடந்த 2019’ஆம் ஆண்டில் பாஜக மாநிலத்தின் 42 மக்களவைத் தொகுதிகளில் 18 இடங்களை வென்ற பிறகு மம்தா பானர்ஜிக்கு தோல்வி குறித்த பயம் வந்துள்ளதால், அவர் தற்போது தேர்தல் வல்லுநர் பிரஷாந்த் கிஷோரை நம்பி களமிறங்க முடிவு சசெய்துள்ளார். கிஷோர் முதல்வரின் மருமகன் மற்றும் மக்களவை உறுப்பினர் அபிஷேக் பானர்ஜியுடன் இணைந்து ஒரு குழுவாக பணியாற்றுகிறார்.

இவர்கள் கட்சிக்குள் நீண்ட காலமாக கோலோச்சி வரும் தலைவர்களை கழட்டி விட்டு, பல இடங்களில் புதுமுகங்களை முன்னிறுத்தி வருகின்றனர். இதனால் கட்சியின் பல சீனியர் தலைவர்கள் கொதித்துப் போய் உள்ளனர்.

அக்டோபரில் அனைத்து கட்சிப் பொறுப்புகளையும் கைவிட்ட கூச் பெஹார் தெற்குத் தொகுதியின் மூத்த சட்டமன்ற உறுப்பினர் மிஹிர் கோஸ்வாமி, எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாகக் கூறினார். கடந்த செவ்வாயன்று சமூக ஊடகங்களில் ஒரு நீண்ட பதிவை வெளியிட்ட அவர், 1989 முதல் பல அவமானங்களையும் பாதகமான சூழ்நிலைகளையும் தாங்கிக் கொண்டேன். அதற்கு காரணம் மம்தா பானர்ஜி மட்டுமே.

ஆனால் தற்போது இருப்பது மம்தா பானர்ஜியின் கட்சி அல்ல. அவர் ஒதுங்கியிருக்கிறார். அதனால் மம்தாவின் ஆதரவாளர்கள் இனி தேவையில்லை. நீங்கள் கட்சியில் இருக்க நினைத்தால், நீங்கள் ஒரு ‘ஆமாம் சாமி’ நபராக இருக்க வேண்டும். இல்லையென்றால் வெளியேறுங்கள்.” என்று கோஸ்வாமி காரசாரமாக குறிப்பிட்டிருந்தார்.

ஆறு வாரங்களில் பானர்ஜியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வராததற்காக வேதனையை வெளிப்படுத்திய அவர், “எனது கட்சி இனி எனது தலைவரின் கைகளில் இல்லை. இது இனி எனது கட்சியாக இருக்க முடியாது.” எனக் கூறினார்.

டி.எம்.சியில் மோதல்கள் புதிதல்ல என்றாலும், இந்த ஆண்டு ஜூலை மாதம் மறுசீரமைப்பின் போது மாவட்டக் குழுக்களில் இளைய முகங்களை முன்னிறுத்துவதில்  தற்போதைய வேகம் உள்ளது. கிஷோரின் பரிந்துரைகளின் பேரில், கட்டமைப்பு மாற்றங்கள் பல பழைய தலைவர்களை கழட்டி விடுவதால் அவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

மற்றொரு மூத்த டி.எம்.சி தலைவர், கூச் பெஹாரில் உள்ள சிட்டாய் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜாததீஷ் சந்திர பார்மா பசுனியா, கோஸ்வாமிக்கு ஆதரவாக பேசியதோடு, கிஷோர் மற்றும் அவரது குழுவின் பரிந்துரையின் பேரில் உள் மாற்றங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

“கடந்த தேர்தலில் பாஜகவுக்கு உதவிய தலைவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. இது 2021’ஆம் ஆண்டில் டி.எம்.சியின் வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கும். கோஸ்வாமி கட்சியில் உள்ள சிலரால் அவமதிக்கப்படுகிறார். அவரை வெளியேற்ற ஒரு சதி நடக்கிறது. அவர் ஒரு மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த தலைவர்.” என பசுனியா கூறினார். 

முர்ஷிதாபாத் மாவட்டத்தில், ஹரிஹர்பாராவைச் சேர்ந்த டி.எம்.சி சட்டமன்ற உறுப்பினர் நியாமோட் ஷேக் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில் கிஷோரின் அதிகாரத்தை வெளிப்படையாக விமர்சித்தார். “எல்லா பிரச்சனைகளுக்கும் பிரசாந்த் கிஷோர் தான் காரணம். முர்ஷிதாபாத்தில் கட்சியை சுவேந்து ஆதிகாரி புதுப்பித்தார். இப்போது அவருடன் பேசும் தலைவர்கள் நடவடிக்கைகளை எதிர்கொள்கின்றனர்.” என்று ஷேக் பேரணியில் கூறினார்.

முர்ஷிதாபாத் பாரம்பரியமாக ஒரு காங்கிரஸ் கோட்டையாக இருந்தது. ஆனால் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிகாரி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட அமைப்பின் பொறுப்பு வழங்கப்பட்ட பின்னர் இந்த சூழ்நிலையை மாற்றினார். பல காங்கிரஸ் தலைவர்கள் அவரது வழிகாட்டுதலின் கீழ் கட்சி மாறினர்.

அண்மையில் கட்சியில் கட்டமைப்பு மாற்றங்களைச் செய்ததற்காக மம்தா பானர்ஜியின் மருமகன் மற்றும் மக்களவை உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி மற்றும் கிஷோர் ஆகியோரிடம் ஆதிகரி அதிருப்தி அடைந்துள்ளதாகவும், முர்ஷிதாபாத் மற்றும் பல மாவட்டங்களில் பரவியுள்ள 65 சட்டசபை இடங்களில் கட்சி தனக்கு விருப்பமான வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று கூறியதை தலைமைக்கு ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.

ஒரு பக்கம் ஒவைசியின் வருகையால் முஸ்லீம் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள் கைநழுவிப் போகும் என்ற பதற்றத்தில் இருக்கையில், மற்றொரு புறம் பிரஷாந்த் கிஷோர் மற்றும் அபிஷேக் பானர்ஜி ஆகியோருக்கு எதிராக கட்சியில் கடும் அதிருப்தி  திரிணாமுல் கட்சித் தொண்டர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Views: - 0

0

0