நேற்றைய சம்பவம் எதிரொலி ; நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி எம்பிக்கள் கடும் அமளி… அமித்ஷா விளக்கமளிக்க கோரிக்கை..!!

Author: Babu Lakshmanan
14 December 2023, 12:06 pm
Quick Share

இன்று நாடாளுமன்றம் கூடியதும், நேற்றைய சம்பவம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று இரு அவைகளிலும் எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்த இரு இளைஞர்கள், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதால் பரபரப்பு நிலவியது. எம்பிக்களின் இருக்கைகள் மீது ஏறி குதித்து கூச்சலிட்ட இருவரையும் அவை காவலர்கள் மடக்கி பிடித்தனர். 2 மர்மநபர்கள் அத்துமீறி நுழைந்ததால் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, நாடாளுமன்றத்திற்குள் புகுந்த சம்பவம் தொடர்பாக ஹரியானாவைச் சேர்ந்த நீலம், மகாராஷ்டிராவைச் சேர்ந்த அனமோல் ஷிண்டே மற்றும் சாஹர் என்பவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, மைசூரைச் சேர்ந்த பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா, இவர்களை பார்வையாளர்களாக அனுமதிக்கக்கோரிய பரிந்துரை கடிதம் கிடைத்தது.

நாடாளுமன்றத்திற்குள் இளைஞர்கள் அத்துமீறி நுழைந்ததை தொடர்ந்து மக்களவை ஊழியர்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். மேலும், நேற்று நடந்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் இன்று மாலை ஆலோசனை நடத்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில், இன்று நாடாளுமன்றம் கூடியதும், நேற்றைய சம்பவம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று இரு அவைகளிலும் எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்து விட்டு பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதிக்க எதிர்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர்.

நேற்றைய சம்பவத்தில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாகக் கூறியுள்ள எதிர்கட்சிகள், உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்கக்கோரி அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

Views: - 228

0

0