காஷ்மீரில் மற்றொரு பாஜக தலைவர் மீது துப்பாக்கிச் சூடு..! தொடரும் தீவிரவாதிகள் அட்டூழியம்..!
9 August 2020, 10:09 amமத்திய காஷ்மீரின் புட்கம் மாவட்டத்தில் இன்று காலை பாஜக தலைவர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பாஜகவின் ஓபிசி மாவட்டத் தலைவர் புட்கம் ஓம்போராவைச் சேர்ந்த அப்துல் ஹமீத் நஜார் காலை நடைப்பயணத்தில் இருந்தபோது, அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
“தாக்குதலில் நஜார் காயமடைந்து சிகிச்சைக்காக ஸ்ரீநகர் எஸ்.எம்.எச்.எஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். “அவருக்கு பாதுகாப்பான தங்குமிடம் ஒதுக்கப்பட்ட நிலையில் அவர் திடீரென அங்கிருந்து வெளியேறியது தான் தாக்குதலுக்குத் காரணம்.” என்று அவர் மேலும் கூறினார்.
தாக்குதல் நடந்த உடனேயே, தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிப்பதற்காக பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
காஷ்மீரில் ஒரு பாஜக தலைவர் மீது கடந்த ஒரு வாரத்திற்குள் நடந்த மூன்றாவது தாக்குதல் இதுவாகும். முன்னதாக கடந்த ஆகஸ்ட் 4’ஆம் தேதி மாலை, அக்ரான் காசிகுண்டில் உள்ள அவரது இல்லத்திற்கு அருகே தீவிரவாதிகள் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் பஞ்சாயத்துத் தலைவராகவும் உள்ள பாஜக தலைவரான ஆரிஃப் அகமது படுகாயமடைந்தார். ஆரிஃப் இப்போது தனது உயிருக்கு போராடுகிறார்.
இதற்கடுத்து ஆகஸ்ட் 6’ஆம் தேதி காலை, பாஜகவைச் சேர்ந்த மற்றொரு பஞ்சாயத்துத் தலைவரான சஜாத் அஹ்மத் காண்டே, குல்கம் மாவட்டத்தில் வெசுவில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.
காஷ்மீரில் ஜனநாயகத்தை முன்னெடுக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட நினைக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மூலம் பஞ்சாயத்துத் தலைவர்களையும், பாஜக தலைவர்களையும் குறிவைத்து தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இதை முறியடிக்க “ஆபரேஷன் சர்பஞ்ச்” திட்டத்தைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.