ட்ரோன்கள் மூலம் காஷ்மீருக்குள் ஆயுதக் கடத்தல்..! கையும் களவுமாக மூன்று தீவிரவாதிகள் கைது..!

19 September 2020, 7:50 pm
DGP_Dilbagh_Singh_UpdateNews360
Quick Share

ஜம்மு-காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங், காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்க பாகிஸ்தான் ட்ரோன்களைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அமைதியைக் குலைக்க முயற்சிக்கிறது. இருப்பினும், பாதுகாப்புப் படையினர் இத்தகைய நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடிந்தது என அவர் மேலும் தெரிவித்தார்.

“ஆயுதங்களை ட்ரோன்கள் மூலம் அனுப்பி ஜம்மு-காஷ்மீரில் அமைதியைக் குலைக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது. ட்ரோன் மூலம் ஆயுதங்கள் அனுப்பியதை தடுப்பது சவாலானது. ஆனால் இதுபோன்ற செயல்களை நாங்கள் கட்டுப்படுத்த முடிந்தது. மேலும் சில வெற்றிகளைப் பெற்றுள்ளோம்” என டி.ஜி.பி. தில்பாக் சிங் கூறினார்.

பயங்கரவாத அமைப்புக்கு அனைத்து ஆதரவையும் வழங்குவதன் மூலம் பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை மீண்டும் வலுப்பெறச் செய்ய பாகிஸ்தான் முயற்சிக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

“ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதக் குழுக்களுக்கு அனைத்து ஆதரவையும் வழங்குவதன் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்க முயற்சிக்கிறது. போதைப்பொருள் கடத்தல்காரர்களை நாங்கள் கண்டிப்பாக கையாள்வோம். பயங்கரவாத நிதியுதவிக்கு போதைப்பொருள் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் பயன்படுத்துகிறது” என்று சிங் கூறினார்.

இன்று முன்னதாக, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் மூன்று பேர் ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினரால் ட்ரோன்கள் மூலம் கிடைத்த ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் கைது செய்யப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூன்று பயங்கரவாதிகளும் தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் ரஹில் பஷீர், அமீர் ஜான் மற்றும் ஹபீஸ் யூனிஸ் வாணி என அடையாளம் காணப்பட்டனர். பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் அனுப்பிய ஆயுதங்களைப் பெறுவதற்காக அவர்கள் ராஜூரிக்குச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட ஆயுதங்களில் இரண்டு ஏ.கே 56 ரக துப்பாக்கிகள், 180 சுற்றுகள் கொண்ட 6 ஏ.கே. மேகஸின்கள், இரண்டு சீன கைத்துப்பாக்கிகள், 30 ரவுண்டுகள் கொண்ட மூன்று கைத்துப்பாக்கி மேகஸின்கள், நான்கு கையெறி குண்டுகள் மற்றும் ரூ 1 லட்சம் ரொக்கம் ஆகியவை அடங்கும் என்று ஜம்மு போலீஸ் ஐ.ஜி. முகேஷ் சிங் தெரிவித்தார்.

Views: - 4

0

0