ஸ்ரீநகரில் மூன்று தீவிரவாதிகள் பலி..! பாதுகாப்புப் படையினர் மீதான தாக்குதல் சதித்திட்டம் முறியடிப்பு..!

17 September 2020, 10:33 am
Army_Operation_UpdateNews360
Quick Share

இன்று காலை ஸ்ரீநகரின் படமலூ பகுதியில் நடந்த மோதலின் போது மூன்று பயங்கரவாதிகளை வீழ்த்தியதன் மூலம் பாதுகாப்புப் படையினர் பெரும் வெற்றியைப் பெற்றனர்.

படமலூவின் ஃபிரதெளசாபாத் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்து கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையை நடத்தியதை அடுத்து பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே இன்று துப்பாக்கிச் சண்டை தொடங்கியது.

சுற்றிவளைப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, வீடுகளில் ஒன்றிற்குள் குவிந்திருந்த பயங்கரவாதிகள், கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டை நடத்தியதில் அப்பகுதியைச் சேர்ந்த 45 வயதான கௌன்சார் ரியாஸ் எனும் பெண்மணி பரிதாபமாக உயிரிழந்தார்.

சி.ஆர்.பி.எஃப்’இன் 117 பி.என் துணை கமாண்டன்ட், ராகுல் குமார் மீதும் புல்லட் பாய்ந்து காயங்களுக்கு ஆளானார், பின்னர் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அவரது நிலை இப்போது சீராக இருப்பதாக கூறப்படுகிறது.

மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், ஸ்ரீநகர் நகரம் மற்றும் புறநகர்ப்பகுதிகளில் அமைதியை சீர்குலைப்பதற்காக தேச விரோத சக்திகளின் திட்டங்களை பாதுகாப்புப் படையினர் முறியடித்துள்ளனர்.

பயங்கரவாதிகளின் அடையாளம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. என்கவுன்டர் இடத்திலிருந்து ஏ.கே. ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. தேடல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பயங்கரவாதிகள் ஸ்ரீநகரின் மையத்தில் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக உளவுத் தகவல்கள் வெளிப்படுத்துகின்றன.

முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி 1 முதல், பிராந்தியத்தில் அமைதியை சீர்குலைக்க பயங்கரவாதிகள் ஐந்து முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். ஐந்து சந்தர்ப்பங்களிலும் பாதுகாப்புப் படையினர் அதை முறியடித்து தீவிரவாதிகளை அழித்தனர்.

இன்றைய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட மூன்று பேர் உட்பட இதுவரை12 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0