பால்கர் சாதுக்கள் கொலை வழக்கு : மூன்று போலீஸ் அதிகாரிகள் நிரந்தர பணி நீக்கம்..! மகாராஷ்டிரா காவல்துறை அதிரடி..!
31 August 2020, 1:48 pmமகாராஷ்டிராவின் பால்கரில் இரண்டு சாதுக்கள் மற்றும் அவர்களது ஓட்டுநரை ஒரு கும்பல் கொலை செய்த சில மாதங்களுக்குப் பிறகு, இந்த வழக்கு தொடர்பாக மூன்று காவல்துறையினர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவத்தில், மூவரும் மகாராஷ்டிரா போலீசார் முன்னிலையில் கட்சின்சில் கிராமத்தில் ஒரு கும்பலால் கொடூரமாக அடித்து கொல்லப்பட்டனர்.
குழந்தைகளைக் கடத்துபவர்கள் இப்பகுதியில் சுற்றித் திரிகிறார்கள் என்ற வதந்திகளுக்கு மத்தியில் இந்த கும்பல் கொலை நடந்தது.
அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்தபோது பால்கரில் உள்ள காசா காவல் நிலைய பொறுப்பாளராக இருந்த உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த்ராவ் காலே, உதவி சப்-இன்ஸ்பெக்டர் ரவி சலுங்கே மற்றும் கான்ஸ்டபிள் நரேஷ் தோடி ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகள் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“கொங்கன் பகுதிக்கான போலீஸ் ஐ.ஜி., சனிக்கிழமையன்று பிறப்பித்த உத்தரவின் மூலம் மூவரும் பணியில் இருந்து நீக்கபட்டனர்” என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
கும்பல் தாக்குதலை அடுத்து சனிக்கிழமை பணி நீக்கம் செய்யப்பட்ட மூன்று பேர் தவிர மேலும் 5 போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். 35’க்கும் மேற்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பால்கர் கொலை சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிரா போலீசார் 154 பேரை கைது செய்ததோடு, சம்பவத்தில் ஈடுபட்ட 11 சிறுவர்களையும் தடுத்து வைத்துள்ளனர்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு மகாராஷ்டிரா குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) மாற்றப்பட்டது. இது வழக்கில் மூன்று குற்றப்பத்திரிகைகளை பதிவு செய்துள்ளது.
0
0