செல்போன் உரையாடலை ஒட்டுக்கேட்பதாக எதிர்கட்சிகள் அமளி : இருஅவைகளும் நாளை காலை வரை ஒத்திவைப்பு

19 July 2021, 4:58 pm
ashwini vaishnav - updatenews360
Quick Share

டெல்லி : எதிர்கட்சியினரின் செல்போன் உரையாடல்களை மத்திய அரசு ஒட்டுக்கேட்பதாக குற்றம்சாட்டி, எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. முதல் நாள் கூட்டத் தொடரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர். மக்களவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட 4 பேர் பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பின்னர், எதிர்க்கட்சி எம்.பி.க்களின் சலசலப்புக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் தனது அமைச்சர்கள் சபையை அறிமுகப்படுத்தினார். ஆனால், பிரதமரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல, மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அவைகள் மீண்டும் கூடியதும் எதிர்கட்சிகள் தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். இதற்கு பதிலளித்த மத்திய நாடாளுமன்றத்துறை அமைச்சர் பிரகலா ஜோஷி, அனைத்து விவாதங்களையும் விவாதிக்க தயார் எனவும் எதிர்க்கட்சியினர் தங்களது அமளிகளை கைவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இருப்பினும், எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது :- ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்கள் உண்மையல்ல. மத்திய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை. எந்ததெந்த நாடுகளில் உளவு பார்க்கப்படுகிறது என்பதை வெளியிட்டுருக்கும் தகவல் தவறானது என அந்த மென்பொருள் நிறுவனமே கூறியிருக்கிறது.

ஒருவருடைய மொபைலை உளவு பார்க்கவேண்டும் என்றால் மத்திய மாநில அரசுகளின் விதிமுறைகள் உள்ளது. அந்த விதிகளை மீறி மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என திட்டவட்டமாகக் கூறினார். ஆனால், அமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்த உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Views: - 128

0

0

Leave a Reply