கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பசுவராஜ் பொம்மை தேர்வு : நாளை பதவியேற்பு? முழுப் பின்னணி!!

Author: Udayachandran
27 July 2021, 8:34 pm
Basavaraj Bommai -Updatenews360
Quick Share

கர்நாடகா : எடியூரப்பாவின் ராஜினாமாவை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பசுவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி எடியூரப்பா 4-வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றார். 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு பாஜகவில் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் எடியூரப்பா பதவியேற்கும் முன்னரே, 2 ஆண்டுகள் முடிந்ததும் முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை அவரிடம் விதிக்கப்பட்டது. நிபந்தனையின் படி 2 ஆண்டுகள் ஆட்சி செய்த எடியூரப்பாவின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவு பெற்றது.

இதையடுத்து அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்து கேள்வி எழுந்தது. இந்த நிலையில் புதிய முதலமைச்சர் தேர்வு செய்வதற்கான பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

பெங்களூருவில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், கிஷன் ரெட்டி உள்ளிட்ட முக்கிய மேலிட நிர்வாகிகளும், எடியூரப்பா உள்ளிட்ட பாஜக எம்எல்ஏக்களும் பங்கேற்றனர்.

இதையடுத்து இந்த கூட்டத்தில் புதிய முதலமைச்சராக பசுவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அமைச்சரவையும் மாற்றி அமைக்கப்பட உள்ளது. எடியூரப்பா கவனித்த நிதித்துறையை கூடுதலாக பசுவராஜ் கவனிக்க உள்ளார். நாளை பதவியேற்பார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

பசுவராஜ் பொம்மை கர்நாடக மாநிலத்திற்கு நன்கு பரீட்சயமானவர். இவர் தந்தை எஸ்ஆர் பொம்மையும் கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர். மாநில அரசுகளை கலைக்க மத்திய அரசு பயன்படுத்தி வந்த 356வது பிரிவுக்கு கடிவாளம் போட்டது பசுவராஜின் தந்தை எஸ்ஆர் பொம்மை தொடுத்த வழக்குதான் என்பது குறிப்பிடதக்கது.

Views: - 176

0

0