காட்டாற்று வெள்ளத்தில் கர்ப்பிணியை டோலி கட்டி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மக்கள் : சாலை வசதி இல்லாததால் அவலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 September 2021, 10:57 am
Andhra Doli - Updatenews360
Quick Share

ஆந்திரா : மலைவாழ் கிராமங்களில் வசிக்கும் நிறை மாத கர்ப்பிணியை காட்டாற்று வெள்ளத்தில் ஊர் மக்கள் டோலி கட்டி அழைத்து சென்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் விஜயநகரம், விசாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் மலைவாழ் மக்கள் வசிக்கும் மலை கிராமங்கள் உள்ளன.

முறையான சாலை, போக்குவரத்து வசதி இல்லாத அந்த கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு இடையே காலம் காலமாக வசித்து வருகின்றனர். பிரசவம், அவசர சிகிச்சை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு தங்கள் கிராமங்களில் இருந்து எளிதில் வெளியூர்களுக்கு செல்ல இயலாத நிலையில் மலைவாழ் கிராமங்களில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வனப்பகுதி, மலை பகுதிகள் ஆகியவற்றில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றனர்.

விஜயநகரம் மாவட்டத்திலுள்ள பச்சிபெண்ட்ட கிராமத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. சரியான போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் மழை வெள்ளம் பொங்கிப் பெருக்கெடுத்து ஓடும் காட்டாறு வழியாக அந்த பெண்ணை கிராமத்தினர், உறவினர்கள் ஆகியோர் டோலி கட்டி சுமார் 4 கிலோமீட்டர் தூக்கி சென்று ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் அவலத்தை சந்தித்தனர்.

ஆந்திராவில் உள்ள விஜயநகரம், விசாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பல ஆண்டுகளாக இது தொடர்கதையாக உள்ளது. ஆனால் ஆட்சியாளர்கள் இந்த இன்னல்களை கண்டும் காணாதது போல் இருந்து வருவதாக மலை வாழ் மக்கள் தங்கள் மனக் குமுறலை கூறுகின்றனர்.

Views: - 254

0

0