கொரோனாவால் மருத்துவமனைகளில் அனுமதிக்க மறுப்பு..! நோயாளிகள் இறப்பு..! அசாமில் பொதுநல வழக்கு தாக்கல்..!

11 September 2020, 5:10 pm
Corona_Virus_UpdateNews360
Quick Share

கொரோனா எதிர்மறை அறிக்கைகளை பெறத் தவறும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாகக் கூறி, அசாம் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டெபப்ரதா சைக்கியா, மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு எதிராக கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

கொரோனா எதிர்மறை சான்றிதழ்கள் இல்லாமல் மருத்துவமனைகளுக்கு செல்லும்போது சிகிச்சையளிக்க மறுத்ததால், முக்கியமான மற்றும் உடனடி மருத்துவ பராமரிப்பு தேவைப்படும் நோயாளிகள் நிறையப் பேர் ,மாநிலத்தில் இறந்துவிட்டார்கள் என்று வெளியான பல செய்தித்தாள் அறிக்கைகளை மேற்கோள் காட்டி, இது குடிமக்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக மனுதாரர் கூறினார்.

“அத்தகைய நபர்களில் விபத்து ஏற்பட்டு மோசமான காயமடைந்த நபர்களும் அடங்குவர். இதில் அவசர மருத்துவ பராமரிப்பு மிக முக்கியமானது. இதன் விளைவாக, விபத்துகளின் போது பலர் இறப்புக்கு ஆளானார்கள்.” என்று பொதுநல வழக்கில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா எதிர்மறை சான்றிதழை வழங்காமல் கர்ப்பிணிப் பெண்கள் கூட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதில்லை என்று மனுவில் கூறப்பட்டதோடு, மருத்துவ கவனிப்பு இல்லாததால் நோயாளிகள் இறக்கும் நான்கு நிகழ்வுகளையும் மேற்கோள் காட்டியுள்ளார்.

மருத்துவமனைகளின் இத்தகைய நடவடிக்கைகள் ஏப்ரல் மாதத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை மீறுவதாகவும், சேவைகளை வழங்குவதற்கு முன்பு கொரோனா சோதனைக்கு மருத்துவமனைகளை வற்புறுத்த வேண்டாம் என்றும், தேவைப்படுபவர்களுக்கு அத்தியாவசியமான முக்கியமான சேவைகளை மறுக்க வேண்டாம் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இது அரசியலமைப்பின் 14 மற்றும் 21’வது பிரிவுகளின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளபடி மனுதாரரின் அடிப்படை உரிமைகளை மீறியதாகவும் மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இல்லை எனும் சான்றிதழ்கள் இல்லாமலேயே மருத்துவமனைகளில் அனைத்து நோயாளிகளையும் அனுமதிப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு அது நீதிமன்றத்தை கோரியது.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு போதுமான இழப்பீடு வழங்குவதைத் தவிர்த்து, நோயாளிகளை அனுமதிக்காததால் ஏற்படும் மரணங்களுக்கு, சட்டப்படி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது குறித்தும் மாஜிஸ்திரேட் விசாரணைகளை அது கோரியது.

ஆகஸ்ட் 14’ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை தலைமை நீதிபதி அஜய் லம்பா மற்றும் நீதிபதி மணீஷ் சவுத்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு செப்டம்பர் 8’ஆம் தேதி வீடியோ கான்பெரன்ஸ் மூலம் விசாரித்தது.

“இந்த கட்டத்தில், கொரோனா நோயாளிகள் ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் கண்டறியப்படும்போது, நாங்கள் இந்த பிரச்சினையை எடுத்துக் கொள்ள விரும்பவில்லை” என்று அமர்வு தனது உத்தரவில் தெரிவித்து வழக்கை அக்டோபர் 19’ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Views: - 0

0

0