சூடான் தீவிபத்து:பிரதமர் மோடி இரங்கல்

4 December 2019, 11:26 pm
Modi Office- updatenews360
Quick Share

டெல்லி: சூடான் தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சூடான் நாட்டில் செராமிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் கேஸ் நிரப்பப்பட்ட டேங்கர் லாரி ஒன்று திடீரென்று தீப்பிடித்து வெடித்துச் சிதறியது. இந்த தீ பரவியதை அடுத்து தொழிற்சாலையும் பற்றி எரியத் தொடங்கியது. இந்த தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 130 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 18 பேர் இந்தியர் என்றும், இதில் 3 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த தீ விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், சூடானில் ஒரு தொழிற்சாலையில் குண்டுவெடிப்பில், சில இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர், சிலர் காயமடைந்துள்ளனர். இந்த செய்தியைக் கேட்டு நான் மிகவும் வேதனை அடைந்தேன். தங்கள் சொந்தங்களை இழந்து துயரமடைந்துள்ள குடும்பத்தினருக்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் எங்கள் தூதரகம் வழங்கி வருகிறது என பதிவிட்டுள்ளார்.