ரூபாய் ஒரு லட்சம் கோடியில் விவசாய உள்கட்டமைப்பு நிதியம்..! பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..!

9 August 2020, 12:35 pm
Agriculture_UpdateNews360
Quick Share

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் விவசாயத் துறைக்கு ஊக்கமளிக்கும் மற்றும் விவசாயிகளுக்கு உதவி செய்யும் முயற்சியில், பிரதமர் நரேந்திர மோடி இன்று ரூ 1 லட்சம் கோடி விவசாய உள்கட்டமைப்பு நிதியத்தை தொடங்கினார். பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் 8.5 கோடி விவசாயிகளுக்கு ரூ 17,000 கோடியை மாற்றும் நிகழ்வையும் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், பிரதமர்-கிசான் சம்மன் நிதியின் ரூ 17,000 கோடி தொகை 8.5 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ஒரே கிளிக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

“இடைத்தரகர்கள் அல்லது கமிஷன் இல்லை. இந்த பணம் நேராக விவசாயிகளுக்கு சென்றது. திட்டத்தின் நோக்கம் பூர்த்தி செய்யப்படுவதால் நான் திருப்தி அடைகிறேன்.” என்று பிரதமர் கூறினார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்த திட்டத்தின் மூலம் ரூ 75,000 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றார். இதில், கொரோனா ஊரடங்கு காலத்தில் ரூ 22,000 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

“விவசாயிகளுக்கு இப்போது மண்டி மற்றும் மண்டி வரியின் வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இப்போது விவசாயிக்கு தங்கள் விளைபொருட்களை விற்க பல வழிகள் உள்ளன.” என்று பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் மோடியின் ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் விவசாயிகளை சுயசார்பு கொள்ளும் முயற்சியில் இந்த நிதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிதி விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும்.

“இன்று, நம் விவசாயிகளுக்கு எங்கு வேண்டுமானாலும் விற்கும் சுதந்திரம் உள்ளது. மேலும் அவர் நேரடியாக கிடங்கோடும் இணைக்க முடியும் அல்லது யார் அதிக விலை கொடுக்கிறார்களோ அவர்களுக்கு விற்கவும் முடியும்.” என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

“இந்த நவீன உள்கட்டமைப்பிலிருந்து விவசாயத் துறை பெரும் பயனடைகிறது” என்று பிரதமர் மேலும் கூறினார்.

இத்திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டுகளுக்கு ரூ 1 லட்சம் கோடி கடன் தொகை கிடைக்கும். 2020 முதல் 2021 வரை விவசாயிகளுக்கு முதற்கட்டமாக ரூ 10,000 கோடி கடன் வழங்கப்படும். மீதமுள்ள மூன்று ஆண்டுகளில் ரூ 30,000 கோடி வழங்கப்படும்.

இரண்டு கோடிக்கும் குறைவான மற்றும் ஏழு ஆண்டுகளுக்கும் குறைவான கடன்களுக்கு வட்டி மீதான மூன்று சதவீத மானியமும் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

இந்த திட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் அனைத்தும் நாட்டில் சிக்கலை எதிர்கொண்டுள்ள சிறு விவசாயிகளை இலக்காகக் கொண்டவை என்று பிரதமர் மோடி கூறினார்.

Views: - 7

0

0