குஜராத்தின் இரண்டு முக்கிய மெட்ரோ திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி..!
18 January 2021, 11:28 amபிரதமர் நரேந்திர மோடி இன்று அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டம் மற்றும் சூரத் மெட்ரோ ரயில் திட்டத்தின் பூமி பூஜையை வீடியோ கான்பரன்சிங் மூலம் மேற்கொண்டார்.
விழாவுக்கு முன்னதாக, பிரதமர் அதை மிக முக்கியமான நாள் என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், “இன்று குஜராத்தின் இரண்டு முன்னணி நகர மையங்களுக்கு ஒரு முக்கிய நாள். சூரத் மெட்ரோ மற்றும் அகமதாபாத் மெட்ரோவின் இரண்டாம் கட்டத்திற்கான பூமி பூஜை காலை 10:30 மணிக்கு நடைபெறும்.” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு புதிய மெட்ரோ கட்டங்களையும் அமைக்க வழிவகுத்த தலைமைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
அகமதாபாத் மெட்ரோவின் இரண்டாம் கட்டம் 28.25 கி.மீ நீளம் கொண்டது. இரண்டு காரிடார்களுடன் ரூ 5.3 கோடி செலவில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒன்று மோதிரா ஸ்டேடியத்தில் இருந்து மகாத்மா மந்திர் வரையிலும், மற்றொன்று ஜி.என்.எல்.யு முதல் ஜிஃப்ட் சிட்டி வரையிலும் கட்டமைக்கப்படுகிறது.
சூரத் மெட்ரோ திட்டம் 40.35 கி.மீ நீளம் கொண்டது மற்றும் இதன் திட்ட மதிப்பு ரூ 12 கோடியாகும். இதில் சர்தானா முதல் ட்ரீம் சிட்டி வரை ஒன்றும், பெசன் முதல் சரோலி வரை மற்றொன்றும் கட்டமைக்கப்பட்டுள்ளது.
குஜராத்தின் இரு நகரங்களுக்கும் மெட்ரோ திட்டங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த வெகுஜன விரைவான போக்குவரத்து முறையை வழங்கும் என்று பிரதமர் அலுவலகம் சனிக்கிழமை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த பூமி பூஜை விழாவில் குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத், உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மற்றும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
0
0