“அசுத்தமே வெளியேறு என நாம் முழக்கமிடுவோம்” மாணவர்களிடம் பிரதமர் மோடி சூளுரை..!

8 August 2020, 6:28 pm
Quick Share

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவுநாளான இன்று அசுத்தமே வெளியேறு என நாம் முழக்கமிடுவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

மகாத்மா காந்தியின் சத்தியாகிரக நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவுநாள் சிறப்பிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, தூய்மை இந்தியா திட்டத்தை மேம்படுத்தும் வகையில், ராஷ்டிரிய ஸ்வச்சதா கேந்திரா என்னும் தேசிய தூய்மை மையத்தை திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து, அங்குள்ள பல்வேறு இடங்களை பார்வையிட்ட அவர் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, கொரோனாவுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

மேலும், தூய்மை இந்தியா திட்டத்தில் மாணவர்களின் பங்களிப்பு அவசியம் இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவுநாளான இன்று அசுத்தமே வெளியேறு என நாம் முழக்கமிடுவோம் எனவும் பொதுமக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்தார். இந்த திட்டத்தால், இந்தியாவில் 55 கோடிக்கும் அதிகமான மக்கள், திறந்த வெளியைக் கழிப்பறையாக உபயோகிக்கும் போக்கை விடுத்து, கழிப்பறைகளைப் பயன்படுத்தும் நிலைக்கு மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.