மேற்குவங்கத்திற்கு பயணம் மேற்கொள்ளும் மோடி..! நேதாஜியின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட முடிவு..!

21 January 2021, 4:31 pm
Narendra_Modi_Netaji_UpdateNews360
Quick Share

2022’ஆம் ஆண்டில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125’வது பிறந்த நாள் கொண்டாடப்படும் நிலையில், மத்திய அரசு இந்த ஆண்டு ஜனவரி 23 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 23 வரை ஒரு ஆண்டு முழுவதும் தொடர் கொண்டாட்டங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. 

இதை தொடங்கி வைக்க, வரும் ஜனவரி 23’ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்காளத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். நேதாஜியின் பிறந்த நாளை ஒவ்வோர் ஆண்டும் துணிச்சல் தினமாக கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது.

இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பின்னர் ஒரு நிகழ்வில் உரையாற்றுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி 23’ஆம் தேதி, பிரதமர் மோடிக்கு பட்டியலிடப்பட்ட முதல் நிகழ்ச்சி, கொல்கத்தாவின் அடையாளங்களில் ஒன்றான விக்டோரியா நினைவிடத்தில் ஏற்பாடு செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் பிரஹ்லாத் படேல் தெரிவித்தார்.

இரண்டாவது நிகழ்ச்சி கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலகத்தில் நடைபெறும். பிரதமர் ஒரு கண்காட்சி மற்றும் சில மீட்டெடுக்கப்பட்ட கட்டடக்கலை தளங்களை இங்கு திறந்து வைப்பார் என்று படேல் கூறினார்.

மேலும் நேதாஜியால் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய இராணுவத்தின் முக்கிய உறுப்பினர்களையும், நகரத்தில் உள்ள அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் மோடி நேரில் சந்தித்து கலந்துரையாடுவார்.

பிரதமரின் மேற்குவங்க பயணத்தில் இதுவரை எந்த அரசியல் திட்டமும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிகழ்வுகளின் போது மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கரும் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.

இதற்கிடையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், இந்த சிறப்பு நிகழ்வைக் குறிக்கும் வகையில் ஜனவரி 23’ஆம் தேதி கொல்கத்தாவில் பாதயாத்திரை மேற்கொள்வதாக அறிவித்துள்ளார்.

நேதாஜியின் 125’வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் ஆண்டு முழுவதும் திட்டங்களைத் திட்டமிட பிரதமர் மோடியின் தலைமையில் 85 பேர் கொண்ட உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 200 படுவா கலைஞர்கள் நேதாஜியின் வாழ்க்கையை சித்தரிக்கும் 400 மீட்டர் நீளமுள்ள ஓவியம் வரைவார்கள் என்று படேல் கூறினார்.

இதற்கிடையே நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தின் சுமார் 26,000 தியாக உறுப்பினர்களின் நினைவாக ஒரு நினைவுச்சின்னம் கட்டுவது குறித்து மத்திய கலாச்சார அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

மேற்குவங்க பயணத்தை முடித்துக் கொண்டு அதே நாளில், பிரதமர் அசாமிற்கும் வருவார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அசாமின் சிவசாகரில் ஒரு லட்சம் நிலம் ஒதுக்கீட்டுப் பட்டாக்களை பிரதமர் விநியோகிப்பார்.

வரும் ஏப்ரல்-மே மாதங்களில் மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய இரு மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், பிரதமர் மோடியின் இரு மாநிலங்களுக்கான பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

Views: - 6

0

0