காங்கிரஸ் தலைவருக்காக விதிமீறிய ஆஜ்மீர் தர்கா காதிம்..! ராஜஸ்தான் போலீஸ் வழக்கு பதிவு..!

25 November 2020, 11:22 am
ajmer_dargah_khadim_updatenews360
Quick Share

கொரோனா கட்டுப்பாடுகளை மீறி காங்கிரஸ் தலைவர் ஹர்திக் படேலுக்கு மரியாதை செலுத்த அனுமதித்ததற்காக ஆஜ்மீர் சூஃபி ஆலயத்தின் காதிம் மீது ராஜஸ்தான் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குஜராத் காங்கிரஸ் செயல் தலைவரான ஹர்திக் படேல் திங்களன்று ஆஜ்மீரில் குவாஜா கரிப் நவாஸ் என்று பிரபலமாக அறியப்பட்ட சூஃபி துறவி ஹஸ்ரத் குவாஜா மொய்னுதீன் சிஸ்டியின் சன்னதியில் மரியாதை செலுத்தினார்.

ஆனால், தொற்றுநோய் சட்டத்தின் கீழ், தற்போது ஆஜ்மீர் சன்னதியில் இது போன்ற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. தடை உள்ள சமயத்தில் இவ்வாறு செய்ய அனுமதி வழங்கியதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரல்கள் வலுத்த நிலையில், ராஜஸ்தான் போலீஸ் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளது.

“கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சடார் மற்றும் பூ வழங்குவதை தடைசெய்யும் தொற்றுநோய் சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நாங்கள் வழக்கு பதிவு செய்துள்ளோம். பைசல் என அடையாளம் காணப்பட்ட ஒரு காதிம் மீது தர்கா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று ஏஎஸ்பி சுனில் தேவாட்டியா கூறினார்.

முன்னதாக, கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்க ராஜஸ்தான் அரசு முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் முககவசம் அணியாததற்கான அபராதம் ரூ 200 லிருந்து ரூ 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Views: - 18

0

0