டெல்லி கலவரத்தில் விவசாயி சுட்டுக்கொலையா?: வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை…அதிர்ச்சியில் விவசாய சங்கங்கள் ..!!
29 January 2021, 12:16 pmபுதுடெல்லி: விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் விவசாயி ஒருவர் உயிரிழந்ததற்கு காரணம் போலீசார் துப்பாக்கியால் சுட்டதாக செய்தி கூறிய இந்தியா டுடே கன்சல்டிங் எடிட்டர் ராஜ்தீப் சர்தேசாய் கூறியது பொய் என பிரேத பரிசோதனையில் நிரூபணமாகியுள்ளது.
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின்போது நவ்னீத்சிங் என்ற விவசாயி வேகமாக ஓட்டி வந்த டிராக்டர் இரும்பு தடுப்பு வேலி மீது மோதி கவிழ்ந்ததில் பலியானார். இதன் வீடியோ காட்சிகள் பல்வேறு டி.வி. சேனல்களில் ஒளிபரப்பாயின. இந்த உண்மையை மறைத்து இந்தியா டுடே டி.வி. சேனலின் கன்சல்டிங் எடிட்டர் ராஜ்தீப் சர்தேசாய், நவனீத் சிங்கை போலீசார் சுட்டு கொன்றதாக தவறான செய்தியை ஒளிபரப்பினார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த டில்லி போலீசார் வீடியோ ஆதாரத்துடன் நிரூபித்தனர். உடனே தவறாக செய்தி ஒளிபரப்பியதை சர்தேசாய் ஒப்புக்கொண்டார். இதையடுத்து இந்தியா டுடே செய்தி சேனல் நிர்வாகம் சர்தேசாயின் ஒரு மாத சம்பளத்தினை பிடித்தம் செய்ததுடன் இரண்டு வாரங்கள் அவரது செய்தி ஒளிபரப்பிற்கு தடை விதித்ததாக தி குயின்ட் செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், நவ்னீத்சிங்கின் பிரேத பரிசோதனை முடிவுகளில் அவரது தலையில் எந்தவித புல்லட் காயங்களும் இல்லை என நிரூபணமாகியுள்ளது என அவரது சொந்த மாவட்டமான ராம்பூரின் போலீஸ் உயரதிகாரி உ.பி.,யில் தெரிவித்தார். இதனையடுத்து அவரது உடல் ராம்பூரில் உள்ள அவரது சொந்த கிராமமான டிப்டிபாவில் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், ராம்பூர் மாவட்ட ஆட்சியர் ஆஞ்சநேய குமார் சிங் கூறுகையில், பிரேத பரிசோதனையின் போது நவ்னீத்சிங்கின் குடும்பத்தினர் அருகில் இருந்தனர். அவரது தலையில் புல்லட் காயம் இருந்திருந்தால், பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளிவந்திருக்கும். பிரேத பரிசோதனையை வீடியா பதிவும் செய்யப்பட்டு, மாவட்ட தலைமை மருத்துவ அலுவலரால் கண்காணிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து எஸ்.பி., ஷோகன் கவுதம் கூறுகையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் புல்லட் காயங்கள் இல்லை. எக்ஸ்ரே.,வும் எடுக்கப்பட்டது அதிலும், புல்லட் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தவிர முகம், கால்களில் 6 காயங்கள் இருந்தன என்றார். மருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தலையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு தான் மரணத்திற்கு காரணம். நவ்னீத் சிங்கின் உடலில் ஆறு காயங்கள் ஏற்பட்டன. புருவத்திற்கு அருகில், அவரது வாயின் அருகே, வலது காதுக்கு மேல், மற்றும் வலது தொடையில் சிதைவுகள் ஏற்பட்டிருந்தன. அவர் இடது காதில் மண்டை ஓட்டின் மேல் வீக்கம் இருந்தது. மார்பின் வலது பக்கத்தில் பலமான காயம் இருந்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் சுட்டுக்கொன்றதாக சர்தேசாய் கூறியது பொய்யென நிரூபணமானது.
0
0