வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் எடுக்க வேண்டுமா..? மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் அவசியம்..! ஐஆர்டிஏஐ சுற்றறிக்கை வெளியீடு..!
21 August 2020, 2:53 pmகாப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) இன்று வெளியிட்டுள்ள ஒரு புதிய சுற்றறிக்கையில், வாகனத்தின் காப்பீட்டைப் புதுப்பிக்கும்போது வாகனத்திற்கான செல்லுபடியாகும் மாசு கட்டுப்பாட்டு (பி.யூ.சி) சான்றிதழைப் பெறுமாறு காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, ஜூலை 2018’இல், உச்சநீதிமன்றம் மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் இல்லாவிட்டால், அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் வாகன காப்பீட்டை வழங்க வேண்டாம் என்று அறிவுறுத்தியது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு காப்பீட்டு நிறுவங்களால் சரியாக அமலாக்கப்படவில்லை என்பதால், தற்போது ஐ.ஆர்.டி.ஏ.ஐ புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
பொது காப்பீட்டு நிறுவனங்களின் அனைத்து தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் நிர்வாகத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்ட இந்த சுற்றறிக்கையில், ஐஆர்டிஏஐ, “மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) உச்சநீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றுவதற்கான நிலை குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது. மேலும் வாகனங்களுக்கு காப்பீடு வழங்குவதற்கு மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் அவசியம் பெற வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளது.
மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் என்பது ஒரு வாகனம் வெளியேற்றும் புகையை சரிபார்த்து, வாகனத்தின் உமிழ்வு அளவுகள் தர மதிப்பீட்டிற்கு ஏற்ப இருக்கிறதா என்பதை ஆராய்ந்து வழங்கப்படுகிறது.