நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : ஒரு ரூபாய் அபராதத்தை இன்று செலுத்துகிறார் பிரசாந்த் பூஷன்..!

14 September 2020, 1:24 pm
Quick Share

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் விதித்த ஒரு ரூபாய் அபராதத்தை இன்று செலுத்துகிறேன் என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.

மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன் தனது ட்விட்டரில் சர்ச்சைகுறிய கருத்து ஒன்றை பதிவிட்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கினார்.

கடந்த ஜூன் மாதம் தனது ட்விட்டரில், தமைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே ரூ.50 லட்சம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தார். அதில், கொரோனா பாதுகாப்பு நடைமுறை விதிகளை மீறி அவர் முகக்கவசம் மற்றும் கையுறை ஆகியவற்றை அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் செயல்பட்டுள்ளார். இது ஏற்க கூடிய ஒன்று கிடையாது.

மேலும் புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்குகளையும் அவர் சரிவர கையாளவில்லை’’ என குறிப்பிட்டிருந்தார். அவரின் இந்த பதிவி நீதிமன்றங்கள் மற்றும் நீதித்துறையை சேர்ந்த அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

இது குறித்து தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த உச்சநீதிமன்றம், தனது கருத்துக்கு மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மன்னிப்பு கோரினால் தண்டனை விதிக்கப்படாது என தெரிவித்தது.

ஆனால், தாம் கூறிய கருத்தில் தவறு இல்லை என திட்டவட்டமாக தெரிவித்த பிரசாந்த் பூஷன், மன்னிப்பு கோர மாட்டேன் எனவும் என்ன தண்டனை வழங்கப்பட்டாலும் அதை ஏற்க தயார் எனவும் கூறினார்.

இதனையடுத்து கடந்த மாதம் 14ஆம் தேதி அவரை குற்றவாளி என உச்சநீதிமன்றம் அறிவித்தது. தொடர்ந்து, ‘ நீதிமன்ற மற்றும் நீதிபதிகளை அவமதித்த விவகாரத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு ஒரு ரூபாய் நீதிமன்றம் அபராதத் தொகையாக வழங்குகிறது. இதனை அவர் வரும் 15ம் தேதிக்குள் கட்ட வேண்டும். தவறினால் 3 மாதம் சிறை தண்டனையும், மூன்று வருடம் எந்த ஒரு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்பாக ஆஜராகக் கூடாது என தடை விதிக்கப்படும்’’ என்று உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் உச்சநீதிமன்றம் விதித்த ஒரு ரூபாய் அபராதத்தை இன்று செலுத்துகிறேன் என்று வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனுவும் தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Views: - 0

0

0